தவறான தமிழ் விரோத செய்தியை வெளியிட்ட நடிகர் விவேக்

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் இன்று தனியார் வானோலி நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ் மொழி பற்றி தவறான செய்தி வெளியீட்டுள்ளதாகவும் இதை தாம் கண்டிப்பதாகவும் தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் என்ற அமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது.

Vivek

அவ் செய்திக்குறிப்பில்….

இன்று 13/06/2014 காலை பண்பலையில் நடிகர் விவேக் அவரது ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறான செய்தி ஒன்றை நேரலையில் பதிவு செய்தார்.

அவர் கூறியதாவது , சமஸ்க்ரித மொழியில் இருந்து தான் உலக மொழிகள் எல்லாம் பிறந்தன. தமிழும் சமஸ்க்ரித மொழியில் இருந்து தான் பிறந்தது என்று பிழையான செய்தியை வெளியிட்டு தமிழ் மொழியை இழிவு செய்துள்ளார்.

இந்தத் தாய் அவளுடைய பிள்ளைக்கு பிறந்தவள் என்று சொல்வது போல் உள்ளது நடிகர் விவேக்கின் கூற்று . விவேக் அவர்களுக்கு மொழி குறித்த அறிவோ, தமிழ் மொழி வரலாறோ தெரியவில்லை எனில் அதை பற்றி பேசக் கூடாது. 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி இந்தியாவின் முதல் செம்மொழி என்ற தகுதியை பெற்றது. செம்மொழி ஆகுவதற்கு பல்வேறு தகுதிகள் வேண்டும் . அதில் ஒன்று பிறமொழிகளின் துணையில்லாமல் தானே தனித்து நிற்கும் திறன் இருக்க வேண்டும் என்பது தான். இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே அந்த சிறப்பு உள்ளது . இதை அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் என்பவர் உறுதிபட கூறியுள்ளார்.

மேலும் தமிழ் தான் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்குகிறது என்பதை தேவநேய பாவாணர் போன்ற பன்மொழி அறிஞர்கள் நிரூபித்து உள்ளனர். தமிழின் தாக்கம் கண்டம் விட்டு கண்டம் சென்றுள்ளதை உலக மொழிகளில் பார்க்க முடிகிறது . ஜப்பானியர்களும் , கொரியர்களும் அவர்கள் மொழியில் தமிழின் தாக்கம் உள்ளது என்பதை எடுத்துக் கூறுகின்றனர். இந்திய அளவில் அதிக கல்வெட்டுக்களும், வரலாற்றுக்கு முந்தைய எழுத்துருக்களும் காணப்படுவது தமிழ் மொழியில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்று தமிழினத் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன .

அப்படி ஒரு தற்சார்புள்ள, தனித்துவமான தமிழ் மொழியை சமஸ்க்ரித மொழிக்கு பிறந்த மொழி என்று தமிழரான விவேக் கூறியுள்ளது வேதனையானது , கண்டனத்திற்கு உரியது . இவ்வாறு தவறான செய்தியை வெளியிட்ட நடிகர் விவேக் தனது தவறை திருத்திக் கொண்டு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் கேட்டுக் கொள்கிறது. இனி வரும் காலங்களில் விவேக் தனது படங்களிலோ , பொது ஊடகங்களிலோ இது போன்ற பிழையான தமிழ் விரோத செய்தியை வெளியிட்டு தமிழ் மக்களை புண்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Posts