கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தவறவிடப்பட்ட ஊழியர்கள் 50 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
நியமனக் கடிதங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து, பாடசாலை மற்றும் வைத்தியசாலைகள், விவசாய திணைக்களங்களில் கடமையாற்றி தவறவிடப்பட்ட ஊழியர்களுக்கான நியமனங்களே வழங்கி வைக்கப்பட்டன.
யாழ். மாவட்டம் முழுவதிலும் தவறவிடப்பட்ட ஊழியர்கள் அதிகமானோர் கல்வி திணைக்களம், வைத்தியசாலை, விவசாய திணைக்களங்களில் கடமையாற்றி வருகின்றனர். அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் கூறினார்.
அதேவேளை, விபரங்கள் அலுவலகத்தில் வழங்கியுள்ளவர்கள் மற்றும் இதுவரை காலமும் வழங்காதவர்கள் அனைவரையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தொடர்பு கொள்ளும் ஊழியர்களுக்கான நியமனங்கள் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் மேலும் கூறினார்.