தவராசா தொடர்பான முடிவு தனிப்பட்ட முடிவல்ல

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான முடிவானது தனது தனிப்பட்ட முடிவல்ல என்றும் அம்முடிவு, கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட முடிவாகும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கட்சி அலுவலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான தீர்மானம், எனது தனிப்பட்ட முடிவல்ல. கட்சி ரீதியான முடிவாகும்.

“2013ஆம் ஆண்டு வடமாகாண சபை தோற்றம் பெற்றபோது, க.கமலேந்திரன், வை.தவநாதன் ஆகியோருக்கு, சுழற்சி முறையிலான எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவது என கட்சியால் தீர்மானிக்கப்பட்டு, க.கமலேந்திரனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

“எனினும் தற்போது, கட்சி முடிவுகளின்படியே வை.தவநாதனுக்கு அப்பதவியை வழங்குமாறு கோரியுள்ளேன். இவ்விடயம் தொடர்பில், தற்போதைய வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் ச.தவராசாவுக்குக் கடிதம் அனுப்பவுள்ளோம். அது தொடர்பில் அவர் உரிய பதில் அனுப்பவில்லை எனில், தொடர்ந்து அவரை கட்சியில் வைத்திருப்பதா என்பது தொடர்பில் ஆராயப்படுவதுடன், கட்சி சார்ந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட, க.கமலேந்திரன் வட மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

எனினும், 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் டானியல் றெக்சிசன் கொலை வழக்கில் கமலேந்திரன் கைது செய்யப்பட்டு, வழக்கு இடம்பெற்று வரும் நிலையில் நிபந்தனைப் பிணையில் கமலேந்திரன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். எனினும், பிணை எடுக்க எவரும் முன்வராத காரணத்தால், சிறையில் அவர் தொடர்ந்தும் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து இவரது இடத்துக்கு மாகாணசபை எதிர்க்கட்சி தலைவராக, சி.தவராசா தெரிவு செய்யப்பட்டார்.

எனினும், தற்போது வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து சி.தவராசாவை நீக்கி விட்டு அப்பதவியை வை.தவநாதனுக்கு வழங்குமாறு, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் கோரியிருந்தார்.

வடமாகாண சபை தேர்தலின்போது ஈ.பி.டி.பி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டமையால், இக்கோரிக்கையை டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரிடமும் வடமாகாண ஆளுநரிடமும் விடுத்திருந்தார்.

இதனையடுத்து வடமாகாண ஆளுநர் றெஜினோல் கூரே, வடமாகாண அவைத்தலைவருக்கு அனுப்பிய கடிதத்துக்கு அமைய, உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய, வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக, சி.தவராசாவே நீடிப்பார் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற மாகாண சபை அமர்வில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts