யாழில் வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு நேற்று சென்றிருந்த போது அவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசி நீதிமன்றை அவமதிக்கும் முகமாக செயற்பட்ட காரணத்திற்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிமன்றுக்கு வந்துள்ளார்.
இதன்போது, தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசி, வித்தியாசமான முறையில் தலைமுடியை அலங்கரித்து, நீதிமன்றுக்கு ஒவ்வாத வகையில் ஆடை அணிந்து வந்துள்ளார்.
திறந்த மன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது மன்றில் அசாதாரணமான முறையில் நடந்து கொண்டார்.
அதன் பின்னர் குறித்த நபரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் அவர் விசாரணைக் கூண்டில் ஏறி நிற்கும் போதும் முறையற்ற விதத்தில் செயற்பட்டுள்ளார்.
அதனை அடுத்து குறித்த நபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பதியுமாறு நீதிமன்ற காவல்துறையினருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் நீதிவான் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து குறித்த நபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.