தலைமன்னார்- இராமேஸ்வரம் தரைப்பாலம் குறித்து ரணில்-கட்கரி பேச்சு

தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைப்பது தொடர்பாக, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ranil-kadkari

5.19 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

22 கி.மீ நீளமுடையதாக இந்த இணைப்புப் பாலத்தை கடலுக்கு மேலாகவும், கடலடி சுரங்கமாகவும் அமைப்பது தொடர்பாக இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று இலங்கை பிரதமருடன் கலந்துரையாடினார்.

புதுடெல்லியில் இலங்கை பிரதமர் தங்கியுள்ள தாஜ் பலஸ் விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

ஏற்கனவே, பங்களாதேஸ், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளைத் தரைவழிப் பாதைகளால் இணைக்கும் 8 பில்லியன் டொலர் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, 5.19 பில்லியன் டொலர் செலவிலான இந்திய- இலங்கை தரைவழிப்பாதை இணைப்புத் திட்டத்துக்கு உதவ ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

Related Posts