கமல்ஹாசன் நடித்துள்ள ‘தூங்காவனம்’ படம் தீபாவளியன்று ரிலீஸ் ஆனது. முன்னதாக தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர் தன்னை அரசியலுக்கு இழுக்க சிலர் முயற்சிக்கின்றனர் அவர்கள் யார் என்பது தனக்கு தெரியும் எனவும் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் நேற்றுசென்னை வந்திருந்த புத்த மத துறவி தலாய்லாமாவை நேரில் சந்தித்தார். அவருடன் நடிகை கவுதமியும் சென்றிருந்தார். நாத்திகவாதியான கமல் ஆன்மிகவாதி தலாய்லாமாவை சந்தித்தது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பாலிவுட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நட்சத்திரங்கள் புத்த மதத்துக்கு மாறினர்.
அதுபோல் கமலும் புத்த மதத்துக்கு மாறுகிறாரா என்று கோலிவுட்டில் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இது பற்றி கமல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘காந்திஜியின் ரசிகன் நான். பகுத்தறிவாளனான நான், ஆன்மிகத்திற்கு வளைந்து கொடுத்துவிடவில்லை. ஆன்மிக தலைவர்களை சந்திப்பதில் எந்த காரண காரியமும் இல்லை. ஆன்மிகத்தில் எனக்கு நாட்டம் இல்லாததுபோல் சினிமாவில் தலாய் லாமாவுக்கு நாட்டம் கிடையாது.
அவரை சந்தித்தபோது, இதுவரை ஒருமுறைகூட சினிமாவை டிவியில்கூட பார்த்தது கிடையாது என்று சிரித்துக்கொண்டே கூறினார். அதே சமயம் சினிமா மூலம் இந்தியா உணர்த்தி இருக்கும் தத்துவங்களையும், அகிம்சா போதனைகளையும் உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். அகிம்சையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. விரைவில் அந்த வழியில் செல்வேன்’ என கூறியுள்ளார்.