இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சோதனை நடவடிக்கைகளுக்காகப் பாதுகாப்பு படையினர் கொழும்பில் உள்ள வீடொன்றுக்கு சென்றிருந்தவேளை அந்தச் சம்பவம் இடம்பெற்றது.
அவ்வேளை கதவை திறந்தவர் பாத்திமா இப்ராஹிம். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான இலாம் இப்ராஹிமின் மனைவி- கர்ப்பிணி.
பொலிஸாரைப் பார்த்ததும் அவர் வீட்டிற்குள் ஓடிவெடிகுண்டை வெடிக்க செய்தார்.அவருடன் சேர்ந்த அவரது மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர்.
இதேபோன்றதொரு சம்பவம் மார்ச் மாதம் இந்தோனேசியாவில் இடம்பெற்றது- பயங்கரவாத தடுப்பு பிரிவினர், ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளரான அபு ஹம்சாவை கைதுசெய்திருந்தனர். இவர் குண்டு தயாரிப்பதில் திறமையானவர்.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவரது மனைவி சொலிமாவை கைதுசெய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்றவேளை சொலிமா தன்னை வெடிக்கவைத்து இறந்தார். இதன் போது அவரது இரண்டுவயது குழந்தையும் இறக்கவேண்டிய பரிதாபம் நிகழ்ந்தது.
இலங்கை முதல் இந்தோனேசியா வரை ஆபத்தான போக்கொன்று ஆரம்பமாகியுள்ளது. ஐ.எஸ் கொள்கையினால் தங்களை தீவிரவாதமயப்படுத்திக்கொண்ட பெண்கள் தற்கொலைக் குண்டுதாரிகளாக மாறுகின்றனர்.இதன் போது தங்கள் பிள்ளைகளையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு அவர்கள் மரணிக்கின்றனர்.
ஜிகாத் வரலாற்றில் பெண் தற்கொலைக் குண்டுதாரிகள் பலர் காணப்படுகின்றனர். ரஷ்யா மேற்கொண்ட போராட்டத்தில் கருப்பு விதவைகள் என்ற பிரிவினர் தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
ஆனால் தங்கள் பிள்ளைகளுடன் தாய்மார்கள் தங்களை வெடிக்கவைக்கும் போக்கொன்று புதிதாக பயங்கரவாதிகள் மத்தியில் உருவாகியுள்ளது.
அல்கொய்தாவில் இவ்வாறான போக்கு இல்லை என தெரிவிக்கின்றார். தென்கிழக்காசியாவைச் சேர்ந்த முன்னாள் அல்கொய்தா உறுப்பினர் சோபியான் சவுரி.
இஸ்லாமை பொறுத்தவரை வீட்டையும் பிள்ளைகளையும் பார்த்துக்கொள்வதே பெண்களுக்கான கடமை என்கிறார் அவர்.
எனினும் தற்கொலை தாக்குதல்களில் ஈடுபடும் பெண்கள் வேகமாக சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புகின்றனர் என்கிறார் அல்கொய்தா ஜெமா இஸ்லாமிய அமைப்பின் நசீர் அபாஸ்.
இஸ்லாமிய பெண்கள் மத்தியில் இவ்வாறான புதிய போக்கு காணப்படுவதை 2018 மே மாதம் இந்தோேனசியாவின் சுரபயா நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் கள் வெளிப்படுத்தியிருந்தன.
இந்த நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
தந்தை, தாய் மற்றும் 18 வயதுக்குட்பட்ட நான்கு பிள்ளைகள் இணைந்து மேற்கொண்ட இந்த தாக்குதல் இந்தோனேசியாவிலும் சர்வதேச அளவிலும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
செல்வந்த வர்த்தகரான தந்தை, மனைவி மற்றும் இரு பெண்பிள்ளைகளின் உடல்களில் வெடி குண்டை பொருத்தினார். அவர்கள் அதனை கிறிஸ்தவ தேவாலயங்களில் வெடிக்க வைத்தனர்.
அதன் பின்னர் அவர் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிளில் ஏற்றி தனது இரு மகன்மாரை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அனுப்பிவைத்தார் அவர்கள் அங்கு தங்களை வெடிக்கவைத்தனர்.
அதன் பின்னர் தந்தை வெடிபொருட்கள் நிரம்பிய காரை மற்றொரு கிறிஸ்தவ தேவாலயத்தை நோக்கி செலுத்தி தன்னை வெடிக்கவைத்தார்.
குண்டுவெடிப்பு இடம்பெறுவதற்கு முதல்நாளிரவு தனது பிள்ளைகளிடம் மரணிக்க தயாராயிருங்கள் என தந்தை தெரிவித்துள்ளார் என அறியத் தருகின்றார் ஆய்வாளரான ரிஸ்கா நூருல்.
தம்பதிகள் தீவிரவாதமயப்படுத்தப்படும் இந்த போக்கு அவர்களது பிள்ளைகளுக்கு ஆபத்தான விடயமாக மாறி வருகின்றது.
பெற்றோர்கள் தாங்கள் ஜிகாத்தில் ஈடு படவேண்டும் என தீர்மானித்தால் பிள்ளைகள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகின்றனர் எனத் தெரிவிக்கின்றார் ஜெமா இஸ்லாமிய அமைப்பின் முன்னாள் தலைவர் நசீர்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சொர்க்கத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என கருதுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆண்களை விட பெண்களால் அதிதீவிரவாத போக்குடன் விளங்க முடியும் என பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் தங்கள் மனதை தம் மனதை உறுதிபடுத்துவதால் அவர்கள் தியாகத்திற்கு அதிகளவு தயாராக இருப்பார்கள். அதனால் அவர்கள் ஆபத்தானவர்கள் என தெரிவிக்கின்றார் ஆய்வாளரான ரிஸ்கா நூருல்.
இந்தோனேசியாவில் பொலிஸார் தேடுதல் நடத்தியவேளை, தன்னை வெடிக்கவைத்த சொலிமா தன்னை விட அதிகளவு தீவிரவாதபோக்கை கொண்டவர் என அவரது கணவர் அபு ஹம்சா விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய தம்பதியினர் இணைய மூலமே தீவிரவாதமயப்படுத்தப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பெண்களில் பலர் தங்கள் கணவர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதனை அவர்களுக்கு அடிபணிவதாக அவர்கள் கருதியுள்ளனர்.
இலங்கையின் பெண் தற்கொலை குண்டுதாரி பயங்கரவாத சூழலில் வாழ்ந்தவர் என்பதால் அவரைப் பற்றி எந்தவித அதிர்ச்சியும் எனக்கு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கின்றார் இந்தோனேசியாவின் சமூக உளவியல் நிபுணர் ஒருவர். பயங்கரவாதிகளின் மனைவிமார் குறித்த எனது ஆராய்ச்சியின் போது பலர் தங்கள் கணவர்களுக்குக் கீழ்பணிவை வெளிப்படுத்தியுள்ளமை தெரியவந்தது.
சிறிய எண்ணிக்கையிலான பெண்களால் மாத்திரமே தங்கள் கணவர்களின் தீவிரவாத போக்கை நிராகரிக்க முடிந்தது ஆனால் அவ்வாறு நிராகரித்தால் அதற்கான விளைவை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் அவர்கள் கணவர்களிடமிருந்து பிரிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்தோனேசியாவில் தீவிரவாதமயப்படுத்தப்பட்ட பெண்கள் சிலர் தங்கள் கணவர்களிடமிருந்து சீதனமாக தற்கொலை அங்கிகளை கேட்கின்றனர் என அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச்மாதம் இந்தோனேசியாவின் பல பகுதிகளில் இவ்வாறான பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.