தற்கொலை அற்ற வாழ்வை நோக்கி…..

தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு, பல்கலைக்கழக மாணவன் தற்கொலை, போன்ற செய்திகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதை எம்மில் பெரும்பாலோர் அறிவர். உலகில் சராசரியாக 40 செக்கன்களுக்கு ஒரு தற்கொலையும், 3 செக்கன்களுக்கு ஒரு தற்கொலை முயற்சியும் இடம்பெறுகின்றன. இலங்கையில் வருடாவருடம் 30,000 செக்கன்களுக்கு ஒரு தற்கொலை இடம்பெறும்வதாக கூறப்படுகின்றது. தற்கொலை வீதம் கூடிய நாடுகளில் இலங்கையும் ஒன்று. உலக சுகாதார நிறுவனத்தினுடைய அறிக்கையின் படி உலகிலுள்ள 127 நாடுகளில் இலங்கை தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையில் 4 ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு 50 தற்கொலைகள் இடம்பெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. போரின் பின்னரான காலப்பகுதியில் எமது மாவட்டத்தில் தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

say-no-to-suicide-logo

தற்கொலை என்பது வாழ்ந்தது போதும் என்ற எண்ணமே அன்றி இறப்பதற்கான விருப்பம் அல்ல என்பது ஊடகவியலாளர்களின் கருத்து. தாங்கள் வாழ்வதை விட இறப்பது மேலானது என்ற எண்ணத்தில் திட்டமிட்டு தமது உயிரைத் தாமே அழித்துக்கொள்கின்றனர். தமது வாழ்க்கையுடன் தொடர்புபட்ட மிக முக்கிய மானவர்களுக்கு தமது நிறைவேற்றப்படாத ஆசைகளையும் உள்ளத்தின் தேவைகளையும் தெரியப்படுத்துவதற்காக எடுக்கும் தவறான முடிவே தற்கொலையாகும். இதனால் இவர்களைச் சார்ந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் தாங்கமுடியாத வேதனையைக் கொடுக்கின்றனர். தற்கொலையில் ஈடுபடுபவரில் சிலர் ஒரு கண நேரத்தில் இவ்வாறான முட்டாள்தனமான முடிவை எடுத்துவிட்டு, இறுதியில் தாம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் வைத்திய சேவைகளை நாடுகின்றபோதும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இறக்கின்றனர்.

தற்கொலைக்கான காரணங்கள்.

எதுவித உதவியுமற்ற நிலையில், முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்த நிலையில் தனக்கு யாருமே இல்லை தான் தனித்துப் போய்விட்டேன் என்ற எண்ணத்தில் ஒருவர் தற்கொலையில் ஈடுபடுகின்றார். பிரச்சினையிலிருந்து எவ்வாறு விடுபடலாம் என்று வழிதெரியாதவர்களில் 20 வீதமானோரும், மது போதைப் பொருளுக்கு அடிமையாளவர்களில் 40 வீதமானோரும், உளநோயினால் 40 வீதமானோரும் தற்கொலையில் ஈடுபடுகின்றனர். இவற்றை விட

1. கணவன் மனைவியிடையிலான குடும்ப பிரச்சினைகள்.
2. காதல் தோல்விகள்.
3. விரும்பத்தகாத கர்ப்பம் அல்லது கருக்கலைப்பு
4. வறுமை மற்றும் கடன்தொல்லை.
5. பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் மற்றும் சுரண்டல்கள்.
6. அன்புக்குரியவர்களின் இழப்பு / உயிரிழப்பு போன்றனவும் தற்கொலைகளுக்குக் காரணங்களாகின்றன.

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் ஏற்படும் போது இலகுவில் மனம் புண்படும் தன்மையுடையவர்கள். பிரச்சினைகளைத் தாங்கும் சக்தியற்றவர்கள், நண்பர்கள் அதிகமில்லாதவர்கள், தங்களது பிரச்சினைகளைப் பகிர்வதற்கும், சொல்லி ஆறுதல் கேட்பதற்கும் வழியற்றவர்கள் உடனடியாகத் தற்கொலை ஒன்றே நிரந்தரத் தீர்வு என்று நினைத்து தற்கொலையில் ஈடுபடுகின்றனர்.

தற்கொலை அபாயம் உள்ளவர்கள்.

இவர்களில் பின்வரும் அறிகுறிகள் காணப்படும்.

1. குடும்ப நண்பர்களுடன் தொடர்பாடலைப் பேணாமல் ஒதுங்கி இருத்தல்.
2. அன்றாட காரியங்களில் ஆர்வமின்றி இருத்தல், உதாரணம் கல்வி, தொழில், உணவு உண்ணல்.
3. தற்கொலை பற்றியும் மரணம் பற்றியும் அதிக அளவில் கதைத்த வண்ணம் இருத்தல்.
4. ஏற்கனவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள்.
5. நடக்கும் எல்லாப் பிழைகளுக்கும் தாமே காரணம் என்று கூறுபவர்கள்.
6. தனிமையில் இருந்து அழுபவர்கள் அல்லது அழ முடியாமல் தவிப்பவர்கள்.

எனவே இவ்வாறான அறிகுறிகள் உள்ளவர்கள் குறித்து பெற்றோரும். உறவினர்களும் அண்டை அயலாரும், சமூகமும் கவனம் செலுத்தல் வேண்டும்.

தற்கொலையைத் தடுப்பதற்கான வழிமுறைகள்.

  1. தற்கொலை எண்ணம் உடையவர்கள் தமது தற்கொலைபற்றிய எண்ணத்தை மிக நெருங்கியவர்களிடம், மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூறவே செய்கின்றனர். எனவே அவ்வாறான சந்தர்ப்பங்களில் பாரமுகமாக இருக்காமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசியமாக புத்திமதிகளை சொல்லி ஆற்றுப்படுத்த வேண்டும்.
  2. வாழ்க்கைக்குத் தேவையான பிரச்சினை தீா்த்தல் திறன் போன்ற திறனாற்றல்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  3. குடும்ப உறவுகளிடையே சரியான புரிந்துணர்வு, தொடர்பாடல், கலந்துரையாடல்கள் பிரச்சினைகளைத் பேசித் தீர்த்தல், போன்ற ஆரோக்கியமான உறவு முறையைப் பேண வேண்டும்.
  4. நல்ல நண்பர்களை உருவாக்கி மனச்சுமை, மனப்பாரத்தை இறக்கி வைப்பதற்கு அவர்களின் துணையை நாடுதல்.
  5. நல்ல பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுதல் உதாரணம் – மனதுக்கு பிடித்தமான இசையை இரசித்தல், இயற்கையை இரசித்தல், கவிதை எழுதுதல்.
  6. பிரச்சினைகள் ஏற்படும் போது தகுந்த உளவளத்துணை சேவைகளை நாடுதல், பிரதேச செயலகங்களில் உள்ள மகளீர் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களை நாடுதல்.
  7. தியானம், யோகாசனம் போன்ற சாந்த வழிமுறைகளில் ஈடுபடுதல்.
  8. மனச்சுமை நீக்கும் அருமருந்தாகிய தெய்வ வழிபாடு, இறைபாசுரங்களைப் பாடுதல், இறைவனிடம் குறைகளைச் சொல்லி அழுதல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
  9. விழிப்புணர்வை ஏற்படுத்தல். – தற்கொலையால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூகத்தளங்களில் இதனை மேற்கொள்ளலாம். ஊடகங்களாகிய பத்திரிகைகள், மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் இவ்வாறான விழிப்புணர்வுகளை பரந்தளவில் முன்னெடுக்கலாம்.
  10. தற்கொலை எண்ணம் உடையவர்கள் பின்வரும் இலவசத் தொலைபேசிச் சேவைகளுக்கு தொடர்புகளை ஏற்படுத்தி தமது பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசித்து உளவளத்துணை சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். உதவி தேவைப்படும் ஒருவரை நீங்கள் இனங்காணும் போது வழிகாட்டுங்கள்.

நேயம் உதவி அழைப்பு எண் – 0212226666 (சுகாதார சேவைகள் திணைக்களம் யாழ்ப்பாணம்)

கைகொடுக்கும் நண்பர்கள் – 0212228117 ( 104 சுமித்திரயோ, யாழ். கிளை நான்காம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்)

வலியில்லாமல் வாழ்க்கை இல்லை எந்தக்காயத்தையும் காலம் என்னும் மருந்து ஆற்றிவிடும். எனவே தற்கொலை என்பது எந்தவோரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். தற்கொலை என்பது ஒரு கணநேரத்தில் எடுக்கும் முடிவு. அந்தக் கணநேரத்திலிருந்து வெளியே வந்து விட்டால் போதும், அங்கத்தை இழந்தவர்களே சாதனைச் சிகரத்தைத் தொடும்போது எதற்காக இந்த அழகிய வாழ்வை நாம் அவசரப்பட்டு அழித்துக்கொள்ள வேண்டும்?. சோதனைகளைச் சாதனைகளாக்கி வளமான வாழ்வுக்கு பாதை அமைப்போம்.

கு.கௌதமன்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரி
யாழ் மாவட்டம்.

மேலும் கட்டுரைகளுக்கு…

Related Posts