தரம் 6 – 11 வரலாற்று பாடப்புத்தகங்களில் தமிழர் வரலாறுகள் புறக்கணிப்பு – சிறிதரன்

2015ஆம் ஆண்டில் விநியோகிக்கப்படவுள்ளதான தரம் 6 முதல்11 வரையான வரலாறு பாடப் புத்தகங்களில் தமிழர் வரலாறு புறக்கணிக்கப்பட்டு தனிச்சிங்கள வரலாறுகளே உள்வாங்கப்பட்டுள்ளன. இத்தகைய புறக்கணிப்புகளும் அழிப்புகளும் தேசிய இனமொன்றை அழிப்பதற்கான முயற்சியாக உள்ளன என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எம்.பி. சபையில் தெரிவித்தார்.

Sritharan

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டதான அமைச்சுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறிதரன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,

2015ஆம் ஆண்டுக்கென விநியோகிக்கப்படவுள்ள தரம் 6 முதல் 11 வரையான வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழர் வரலாறுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஆனால் தனிச்சிங்கள வரலாறுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. வரலாறுகளை மூடி மறைப்பது அல்லது அழிப்பது என்பது தேசிய இனம் ஒன்றை அழிக்கும் முயற்சியாகும்.

யுத்தத்தின் போது தமிழர்கள் அழிக்கப்பட்டனர். தற்போது வரலாறுகள் மறுக்கப்படுவதன் மூலம் தமிழரின் வேர்களும் பிடுங்கப்படுகின்றன.

விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே இங்கு நாகர் மற்றும் இயக்கர் ஆகிய இனங்களைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அவர்கள் பூர்வீகமாக தமிழ் மொழியைப் பேசுபவர்களாகவும் இருந்துள்ளனர் எனினும் இங்கு வரலாறு உள்ளவாறு கூறுவதற்குப் பதிலாக திரிபுபடுத்தப்படுகின்ற நிலை காணப்பட்டு வருகிறது.

மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டு வரலாறுகள் எழுதப்படுமானால் இங்கு தமிழர்கள் வாழ்ந்ததற்கான வரலாறுகள் இல்லாது போய் விடும்.

இனங்கள் தொடர்பான வரலாறுகள் அழிக்கப்பட்டு பிறிதோர் இனத்தின் வரலாறுகள் திணிக்கப்படும் போதே மக்கள் இனப் பகைமைக்குள் தள்ளப்படுகின்றனர். மேலும் மொழி ஒன்று ஒடுக்கப்படும் போது அந்த மொழி பற்றிய சிந்தனை மேலோங்குகிறது.

ஜப்பான், சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் பௌத்த மதம் உள்ளது. அத்துடன் இலங்கையிலும் தமிழ் பௌத்தர்கள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. தமிழ் மக்களின் வரலாறுகள் திரிபுபடுத்தப்படுகின்ற நிலைமையைப் போக்கி தமிழர் வரலாற்றை சரியாக நெறிப்படுத்துவதற்கு யாழ். பல்கலைக்கழகமும் வட மாகாண சபையும் மற்றும் தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Posts