தரம் பிரிக்கப்படாத குப்பைகளை மாநகர சபைப் பணியாளர்கள் அகற்ற மாட்டார்கள். யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட அனைத்து வரியிறுப்பாளர்களும் தமது இடங்களில் உள்ள கழிவுகளைத் தரம் பிரித்தே இனி மாநாகர சபைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். என்று யாழ்.மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.
குருநகர் வட்டாரப் பகுதிகளில் திண்மக் கழிவுகளைத் தரம் பிரித்தல் தொடர்பான அறிவுறுத்தல் செயற்பாடுகளுக்காக இன்று தொடக்கம் மாநகர சபை உத்தியோகத்தர்கள் வீடு வீடாக வருகை தரவுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பைப் பொதுமக்கள் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாநகர சபைக் கட்டளைச் சட்டம் பிரிவு 129 இன்படி மாநகர சபைக்கு உட்பட்ட அனைத்து வரியிறுப்பாளர்களும் (குடியிருப்புகள்,கடைகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள், மரக்கறி நிலையங்கள், பழக்கடைகள், இறைச்சி, மீன் , முட்டைக்கடைகள், தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், ஏனைய நிறுவனங்கள்) தங்களால் உருவாக்கப்படும் அனைத்துக் கழிவுகளையும் பின்வருமாறு தரம் பிரித்து மாநகர சபையிடம் ஒப்படைக்க வேண்டும்.
தரம் பிரிக்கப்படாத கழிவுகளை மாநகர சபை எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து பெற்றுக் கொள்ளமாட்டாது.
யாழ்.மாநகர சபையால் சேகரிக்கப்படும் கழிவுகள் தரம் பிரிக்கப்படாது அகற்றப்படுவதால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன் மீள்சுழற்சிக்கு உட்படுத்த வேண்டிய கழிவுகள் வீண் விரயமாகின்றன. அதனை மீள்சுழற்சிக்குப் பயன்படுத்திப் பயன்படுத்த முடி யாத நிலையும் காணப்படுகிறது.
இலை, குழை, போன்ற தாவரக் கழிவுகளை ஒரு பிரிவாகவும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை ஒரு பிரிவாகவும், தொற்றுநோய் அபாயமுள்ள கழிவுகள் (பம்பஸ் போன்றன) பையினுள் இட்டுக் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும்.
சமையல் கழிவுகள் ஒரு பிரிவாகவும், போத்தல் மற்றும் கண்ணாடிகள் ஒரு பிரிவாகவும், உலோகங்கள் மற்றும் அலுமினியக் கழிவுகள் ஒரு பிரிவாகவும், இலத்திரனியல் கழிவுகள் (பகிரங்க அறிவித்தலின் பின்னர் சபையால் சேரிக்கப்படும்) ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட வேண்டும்.
இக்கழிவுகள் தவிர்ந்த ஏனைய கழிவுகளை மாநகர சபையின் கட்டணக் கழிவகற்றல் பகுதியுடன் தொடர்பு கொண்டு கட்டணம் செலுத்தி அகற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.