தயா, கே.பி, தமிழினியை வைத்து மக்களை ஏமாற்ற முயற்சி: பொன்சேகா

Sarath-ponsekaதமிழ் மக்களை திசை திருப்புவதற்காகவே கே.பி, தயா மாஸ்டர், தமிழினி ஆகியோரை வடமாகாண சபை தேர்தலில் அரசு நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது’ என முன்னாள் இராணுவ தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இவர் மிலேனியம் விருந்தினர் விடுதியில் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘இன, மத, பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். பிரச்சினைகளை பெரிதாக்கி மக்களை வேறு திசைக்கு கொண்டு செல்வதே அரசின் நோக்கம். அதற்கு மக்கள் இடம்கொடுக்க கூடாது.

யுத்தம் மக்களை நிறைய பாதித்துள்ளது. யுத்தத்தின் பின்னரும் மக்கள் எதிர்பார்த்த சமாதானம் கிடைக்கவில்லை. யுத்தத்தினால் இலாபம், நஷ்டம் என்று யாருக்கும் இல்லை.

அரசாங்கம் இன, மதத்திற்குள் பிரச்சினைகளை உருவாக்கி மக்களை திசை திருப்புகின்றார்கள். ஆனால், இங்குள்ள பிரச்சினை யாருக்கும் தெரியாது.

நான் வடக்கு மக்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்துள்ளேன். அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து அனைத்து மக்களையும் ஒற்றுமையுடன் நடத்துவேன்.

வடக்கு மக்கள் யுத்தத்தின் பின்னர் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை. மக்களுக்கு தேவையானவற்றினை எவ்வாறு முன் வைப்பது என்பது பற்றி அரசுக்கு தெரியவில்லை.

அத்துடன், இந்தியாவுடன் ஒற்றுமையாக இருக்கவும் இலங்கை அரசுக்கு தெரியவில்லை. பிழையான வழியில் கொண்டு செல்கின்றார்கள். அதேவேளை, 13ஆவது திருத்தினை மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts