இரவுவேளை மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியரைத் தாக்கிய இளைஞர்கள் மல்லாகம் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்தனர் குறித்த தம்பதியினர். இவர்களை திடற்புலம் சந்திவரை பின்தொடர்ந்து சென்றுள்ளது இளைஞர் கும்பல் ஒன்று.
இதனை அவதானித்த கணவன் தனது சமயோசித புத்தியால் இளைஞர்களுக்கு போக்குக் காட்டியபடி சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். அதற்குள் அந்தத் தம்பதியரை இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இந்த நேரத்தில் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வர அந்த இளைஞர் கும்பல் தப்பியோடிவிட்டது.
அவர்களைத் துரத்திச் சென்றனர் பொலிஸார். சுதந்திரபுரம் பகுதியில் ஒரு இளைஞர் பொலிஸாரிடம் அகப்பட்டுள்ளார். அந்த இடத்தில் பொலிஸாருடன் சிலர் முறுகலில் ஈடுபட்டனர்.
பொலிஸாரின் வாகனமும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சுன்னாகம் பொலிஸார் உரிய விசாரணைகளை நடத்தி அந்தக் கும்பலில் இருந்த எட்டுப் பேரையும் கைதுசெய்து நேற்றுமாலை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்று இளைஞர்களை இருவாரகாலம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.