தமிழ் மொழி பேசும் பொலிஸாரால் கைத்துப்பாக்கி காண்பித்து மோட்டார் சைக்கிள் பறிமுதல்

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிவில் உடைதரித்த தமிழ் மொழி பேசும் பொலிஸாரால், இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கைத்துப்பாக்கி காண்பித்து பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று மணி நேரத்தத்துக்குப் பின்னர் மீள கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் யாழ், ஐந்து சந்திப் பகுதியில், கடந்த சனிக்கிழமை (23) பகல் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து, பாதிக்கப்பட்ட இளைஞர் கருத்துத் தெரிவிக்கையில்,

“காரைநகரைச் சேர்ந்த நானும் எனது நண்பன் ஒருவனும் அன்றைய தினம் யாழ். நகருக்கு வந்து இருந்தோம். அவ்வேளை ஐந்து சந்தி பகுதியில் நண்பன் ஒருவரை கண்டு வீதியோரமாக நின்று நண்பனுடன் கதைத்துக்கொண்டு இருந்தோம்.

“அவ்வேளையில், ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த சிவில் உடை தரித்த இருவர், தமிழ் மொழியில் தான் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளை தா என மிரட்டி மோட்டார் சைக்கிளைக் கேட்டனர்.

“அதற்கு நாம் மறுப்புத் தெரிவிக்கவே, தமது இடுப்பில் இருந்து கைத்துப்பாக்கியைக் காண்பித்து, மோட்டார் சைக்கிளை தா என மிரட்டி எம்மிடம் இருந்து மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்து, மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்று விட்டனர்.

“அதன் பின்னர், நாம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்குச் சென்று மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரித்தபோது, அது குறித்து தமக்கு தெரியாது என பொலிஸார் தெரிவித்தனர்.

“அவ்வேளை நாம் அது குறித்து முறைப்பாடு செய்ய போகின்றோம் என கேட்ட போது, பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாது. மோட்டார் சைக்கிளை வாங்கி சென்றவர்கள் வந்ததும் அதனை பெற்றுச் செல்லுமாறு கூறினார்கள்.

“அது குறித்து முறையிட யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு அவர் இல்லை. அதனையடுத்து, வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கு முறையிட சென்ற போது, அது குறித்து யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம் என கூறி எம்மை அனுப்பி வைத்தனர்.

“மீண்டும் நாம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற போது, எம்மிடம் மோட்டார் சைக்கிளைப் பறித்து சென்றவர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் எம்மிடம் மீள மோட்டார் சைக்கிளை ஒப்படைத்தனர்.

“மோட்டார் சைக்கிள் பறித்து சென்றமை தொடர்பில் முறைப்பாடு செய்ய சென்ற போது எமது முறைப்பாட்டை ஏற்க முடியாது என எம்மை திருப்பி அனுப்பினார்கள்.

“குறித்த சிவில் உடைதரித்த இரு பொலிஸாரும் எமது மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்து கொண்டுச் சென்று சட்டவிரோத செயலில் ஈடுபட்டு இருந்தால், எமது மோட்டார் சைக்கிள் இலக்கமே பதிவாகி இருக்கும்” எனத் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், யாழ் .பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கேட்ட போது,

“குறித்த இரு இளைஞர்கள் தொடர்பில் சந்தேகத்தில் விசாரணை செய்தோம். மோட்டார் சைக்கிளை பறிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

Related Posts