ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனத் தன்மையினை பாதுகாக்க கோரி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாட்டினை செய்துள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரசாங்கம் இராணுவ ஆக்கிரமிப்பினை செய்து வருவதுடன் தேர்தல் பிரசாரத்திகதி முடிவடைந்தும் ஜனாதிபதி தனது பிரசாரங்களை அரச ஊடகங்களூடாக பிரசுரிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அரசாங்கம் தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றதென்று பொது எதிரணி நேற்று காலை தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து முறையிட்டிருந்தனர். காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச் சந்திப்பு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்திருந்தது.
பொது எதிரணியின் பிரதிநிதி என்ற வகையில் நான் தேர்தல்கள் ஆணையாளரை சந்திக்க பல காரணங்கள் உள்ளது. குறிப்பாக தேர்தல் பிரசாரங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறுத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சட்டபூர்வமாக தெரிவித்த போதிலும் இன்னும் அரச ஊடகங்களில் அரசாங்கத்தின் பிரசாரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. அரச ஊடகங்கள் தேர்தல் சட்டத்தினை மீறி அரசாங்கத்தின் பலத்துடன் இவ்வாறு மோசமாக செயற்பட்டு வருகின்றனர்.
மேலும் வாக்குச் சீட்டுக்களில் மோசடிகளை அரசு செய்து வருகின்றது. வாக்குச் சீட்டில் எமது பொது எதிரணியின் சின்னம் இடாது வேறு சின்னத்தினை பதித்து சகல பகுதிகளுக்கும் பிரசுரித்து வருகின்றனர். இது மக்களை குழப்பும் செயற்பாடாகவே உள்ளது. அதேபோல் பொது மக்களின் வாக்கினை தடுப்பதற்கு அரசு லஞ்சம் கொடுத்து வருகின்றது. ஒரு வாக்குச் சீட்டுக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்படுகின்றது என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது.
அதேபோல் வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதுடன் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. வடக்கின் தபால் வாக்களிப்பினை தடுக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே முயற்சிப்பதாகவும் இராணுவத்தின் மூலம் அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் ஆரம்பத்தில் இருந்தே தகவல்கள் கிடைத்து வருகின்றது. இப்போது வடக்கு, கிழக்கினை இலக்கு வைத்து இவ்வாறான செயற்பாடுகளை செய்கின்றனர்.
அத்தோடு எனது பெயரை வைத்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் இன்னொருவரை அரசு போட்டியிட தயார்ப்படுத்தியுள்ளது. அவர் வெளியேறுவதை என்னுடன் தொடர்புபடுத்தி நான் தேர்தலில் இருந்து வெளியேறியதாக செய்திகளை பிரசுரிக்க அரசு திட்டம் தீட்டியுள்ளது. எனவே, இவ்வாறான மிக மோசமாக அரசாங்கம் தனது தேர்தல் பிரசாரத்தினை செய்து கொண்டிருக்கின்றது. எனவே இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாட்டினை செய்து நாளை ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமான தேர்தலை நடத்தக் கோரியே முறைப்பாட்டினை செய்துள்ளோம்.