தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என தீர்மானித்துவிட்டனர் -தம்பி மு. தம்பிராசா-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி மு. தம்பிராசா அவர்கள் இன்று (07.12.2014) கொழும்பில் நடாத்திய ஊடாக மகாநாட்டில் முக்கியமான பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்ட சில கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

அதன் விபரங்கள் பின்வருமாறு,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முன்னணி வேட்பாளர்களுமே கடந்த இரு நூற்றாண்டுகளாக புரையோடிப்போய் இலங்கைத் திருநாட்டை சின்னாபின்னமாக்கியிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு இதுவரை முன்னுரிமை கொடுக்கவில்லை.

கடந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தில் சீரழிந்து சிதைந்துபோனது எனது தேசம். எனது தமிழினம். இதை மறந்து ஆட்சி மாற்றம், குடும்ப ஆட்சியொழிப்பு, நிறைவேற்று அதிகார ஒழிப்பு என்னும் கோசங்களுடான மகிந்தவோ, மைத்திரியோ எமது கடந்த கால எமது மக்களின் அவலங்களுக்கு அதனால் அடைந்த துயரங்களுக்கு முன்னுரிமையோ அல்லது எமது இனப்பிரச்சினை சம்பந்தமாக எந்த ஒரு தீர்வுக்கான எண்ணத்தையோ இன்றுவரை வெளிக்கொணராத நிலையில் தேசிய அரசாங்கம் எமது இனப்பிரச்சினையை தீர்த்து வைக்கும் என எப்படி தமிழ்பேசும் மக்கள் நம்ப முடியும்?.

கடந்த காலங்களில் தமிழ் தலைமைகளுடன் சிங்கள தேச தலைவர்களால் செய்து கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களுமே கிழித்தெறியப்பட்டதுதான் வரலாறு.

சந்திரிகாவை ஜனாதிபதியாக்கிய பங்கு எமது தமிழ் மக்களுக்கும் உண்டு. மலையக மக்கள் முன்னணி தலைவர் அமரர் சந்திரசேகரனுக்கும் உண்டு. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹ_ம் அஷரப் அவர்களுக்கும் உண்டு. ஆனால் இறுதியாக நடந்தது என்ன?

சந்திரிகா ஆட்சியில் தான் தமிழ் பெண்கள் இராணுவத்தினரின் கைகளின் ஊடாக மானபங்கப்படுத்தப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள்.

தமிழ் மக்கள் பழிவாங்கப்படும் பொழுது துணிவுடன் குரல்கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களில் ஒருவரான அமரர் நீலன் திருச்செல்வம் அவர்களின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட 2000ம் ஆண்டின் தீர்வுத் திட்டம் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் கிழித்தெறியப்பட்டது.

ஆனால் இன்று அந்த இருவரும் ஒரே மேடையில் சிங்கள தேச அதிகார மாற்றத்திற்காக ஒன்றுபட்டு நிற்கின்றார்கள்.

அன்று எமது இனப்பிரச்சினை சம்பந்தமான தீர்வுத் திட்டத்திற்கு எதிரும்புதிருமாக இருந்து நாடகமாடியிருந்தார்கள். இந்த நாடகத்தின் தொடர்ச்சியாக இன்று வரலாற்று ரீதியான எமது தமிழ் மக்களது பிரச்சினையை அவர்களது அரசியல் சாணக்கியத்தின் மூலம் காணாமற்போகச் செய்துவிட்டார்கள்.

எது எப்படியிருந்தபோதிலும் எமது மக்களின் இனப்பிரச்சினை எமது இனத்திற்கு எந்நிலை நேர்ந்தாலும் மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ கூடிய ஒரு விடயமல்ல.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் எமது மக்களின் சுதந்திரமான சுகவாழ்விற்கான போராட்டம் ஜனநாயக நெறிமுறைகளுக்கமைய பாதைகள் மாறிப் பயணிக்கும் என்பதை அனைத்துலகமும் புரிந்துகொள்ள வேண்டும்

ஆகவே ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களது எதிர்வரும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினை தீர்வுக்கு ஒரு முக்கிய இடமளிக்கப்பட வேண்டும். அதற்கான காத்திரமான அத்திவாரம் இச்சந்தர்ப்பத்தில் இடப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.

எனவே, தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை இந்தவிதமான நியாயபூர்வமாக எமது தமிழ் மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு தங்களது சுய விருப்பின்பேரில் தீர்மானிப்பார்கள்.

இன்று திரு. மனோகணேசன் அவர்கள் எதிரணி உடன்படிக்கையில் இனப்பிரச்சினை தீர்வுபற்றி எதுவுமே தேவையில்லை என்றும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இடம்பெறத் தேவையில்லையென்றும் தனது கருத்தாக சுடரொளி கொழும்பில் பதிப்பில் கூறியுள்ளார்.

யார் இந்த மனோ கணேசன்?. எமது முப்பது வருடகால வீரமறவர்களின் விடுதலைப் போராட்ட யுத்தத்த நடாத்தியவரா இந்த மனோ கணேசன்? அல்லது போராளியா? அல்லது போராளிகளின் தலைவரா? எமது மறவர்கள் தம்முயிரை எமது தமிழ் மக்களின் சுதந்திரமான சுகவாழ்விற்கு தானமாக கொடுத்தபோது எங்கிருந்தார் இவர்.

அதற்கான போதிய ராஜதந்திர காரணங்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் அரசியல் தீர்வு சம்பந்தமாக எதுவும் கூறப்படத் தேவையில்லை என்று பகிரங்கமாக மனோ கணேசன் தெரிவித்ததை வன்மையாக கண்டிப்பதுடன், நாம் சார்ந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி திரு மனோ கணேசன் கூற முடியாது.

இலங்கை வாழ் தமிழ் மக்கள் ஒவ்வொருவரினது இதயத்திலும் வலியும், வடுவும் இருக்கின்றது. எம்மினம் இந்தப் பூமியில் வாழும்வரை அது இருந்துகொண்டே இருக்கும்.

இலங்கை வாழ் தமிழ் மக்கள் ஒருபொழுதும் மனோ கணேசன் போன்றவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாக என்றுமே இருக்க மாட்டார்கள்.

எமது தமிழ் மக்கள் தகுதி நிறைந்த அரசியல் ஞானத்துடன்,
சாணக்கியம் நிறைந்த ராஜதந்திரம் மிக்க சிவில் கிரிமினல் சட்டத்தரணிகளையும். போராளிகளான அரசியல் தலைவர்களையும், நீதியரசர்களையும், அரசியல் தலைமைகளையும் காலம் காலமாக கொண்டிருந்தவர்கள் இன்றும் கொண்டிருப்பவர்கள் என்பதை திரு மனோ கணேசன் அவர்கள் என்றைக்கும் மறந்துவிடக் கூடாது.

ஆனாலும் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான காலகட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மனோ கணேசனது ஆதரவை, ஒத்துழைப்பை மறுப்பதற்கில்லை.

ஆகவே நான் கூறுவது இருவேட்பாளர்களும் தமிழ்மக்களுக்கான தமது திட்டங்களுடன் தேர்தல் விஞபனத்துடன் வரவேண்டும்.தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என தீர்மானித்துவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்

Related Posts