தமிழ் மக்கள் மீதான அநீதி தொடர்கிறது: ஐ.நா

இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் தொடர்ந்தும் அச்சமான சூழலில் வாழ்ந்து வருவதாகவும் இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழு தெரிவித்துள்ளது.
ஐ.நா. சபையில் நடைபெற்று முடிந்த இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் போதிலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அநீதியை எதிர்நோக்கி வருகின்றனர். இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் வல்லுறவுகள் தொடர்பான எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை.

அதுமட்டுமின்றி அரச துறைகளில் தமிழ் மொழி குறைபாட்டினால் தமிழ் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். மேலும், அதிகரித்த இராணுவப் பிரசன்னத்தினால் மக்கள் தொடர்ந்தும் அச்சம் மிகுந்த சூழலிலேயே தமது வாழ்நாளை கழித்து வருகின்றனர்.

அத்துடன் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பல்வேறு தமிழர் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாமலேயே உள்ளது என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts