தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரானது என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக அவரிடம் வினவிய போதே வடமாகாண சபையில் வைத்து இவ்வாறு நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் பேரவையானது, தமிழரசு கட்சிக்கோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கோ எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்த முடியாது.
அந்த வகையில், சில காலங்களின் பின்னர் தமிழ் மக்கள் பேரவை மெல்லிய காற்றுடன் களைந்து போய்விடும்.
அதனால், தமிழரசு கட்சியின் உறுப்பினர்களோ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களோ அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துள்ள தமிழ் அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் அண்மையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளி கட்சி என கூறியுள்ளார்.
இந்த கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான கருத்தாக இருக்கின்ற காரணத்தினால், தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரானதே என்றும் அவர் கூறினார்.
அத்துடன், வடமாகாண சபை உறுப்பினர்கள் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளவில்லை என்றும், எதிர்காலத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.