தமிழ் மக்கள் பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான உபகுழுவின் சர்வதேச சட்ட ஆலோசகராக சர்வதேச சட்ட வல்லுனரும், பிரபல்ய போர்க்குற்றம் மற்றும் இனஅழிப்பு சட்ட வல்லுனருமாகிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் பிரான்சிஸ் பொயில் இணைந்துள்ளார்.
ஒரு உள்ளக விசாரணைகூட இம்மியளவும் நகராத நிலையில், அதுவும் உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் சேர்த்துகொள்ளப்படமாட்டார்கள் என செய்திகள் வரும் வேளையில், தமிழ் மக்கள் பேரவையினருடன் பேராசிரியர் பொயில் இணைந்துள்ளது நிச்சயம் சர்வதேசத்தாலும், தமிழ்த்தலைமைகளாலும் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு மன ஆறுதலைக் கொடுக்கும் என நம்பலாம்.
மேலும், 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னும், சர்வதேசமும், தமிழ்த்தலைமைகளும் இலங்கை அரசுடன் இணைந்து அரங்கேற்றிய ஐ. நா. தீர்மானம் மூலம், ஒரு காலம் கடத்தி, தமிழ் மக்களை ஏமாற்றி, இன அழிப்பிற்கான விசாரணையை நீர்த்துப்போகச் செய்யப்படும் ஒரு கபட நாடகத்திற்கு, பேராசிரியர் பொயிலின் தமிழ் மக்கள் பேரவையினருடனான இணைவு ஒரு பெரும் சவாலாக அமையும் எனலாம். மேலும், இது ஒரு மிக முக்கிய வரலாற்றுத் திருப்பத்திற்கான ஆரம்பமாக கருத்தப்படலாம்.
இவ்வேளையில், உள்ளக விசாரணையே இல்லையென்றளவுக்கு செல்கையில், இன்று தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உண்மையிலேயே 2009 இன அழிப்பிற்கு ஒரு நீதி கிடைக்கவேண்டும் என நினைப்பின், தமிழ் மக்கள் பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான உபகுழு ஆரம்பிக்கவிருக்கும் செயற்திட்டங்களிற்கு தமது முழு ஆதரவினை வெளிப்படையாகத் தெரிவித்து, எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டுமென வேண்டிக்கொள்கின்றோம்.
இவ்வாறு தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.