தமிழ் மக்கள் பேரவையில் மூன்று அரசியல் கட்சிகள் இணைவு

தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பின் அணியில் தற்போது மூன்று அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புக்களும் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு பிரதிநிதி ரீ.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் பலம் காரணமாக எம்மோடு அணி சேர்ந்து கொள்வதற்கு பலர் விரும்புகின்றனர்.

ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனை தலைமையாகக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி அதேபோன்று சித்தார்த்தனை தலைமையாகக் கொண்ட புளொட் கட்சியும் தமிழ் மக்கள் பேரவையோடு இணைந்திருக்கின்றன.

மேலும், கஜேந்திரகுமாரை தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனும் அரசியல் கட்சியும் எம்மோடு இணைந்துள்ளது. தற்போதைக்கு இந்த நான்கு சாராராகிய நாம் ஒரே அணியில் இணைந்து செயற்பட்டு வருவதன் ஒரே நோக்கம் வடக்கும் கிழக்கும் இணைந்ததான சமஷ்டி ரீதியிலான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும். அந்த தீர்வினூடாக தமிழ் பேசும் சமூகங்கள் இந்த நாட்டிலே நிம்மதியாக வாழ வேண்டும் என்பதேயாகும்.

‘எழுக தமிழ்’ நிகழ்வு மக்களின் பேராதரவோடு வடக்கிலே இடம்பெற்று விட்டது. அதேபோல கிழக்கிலே எதிர்வரும் 21ஆம் திகதி எழுக தமிழை மக்கள் பேராதரவுடன் நடத்தி பிரகடனத்தைச் செய்யவிருக்கின்றோம்.

கிழக்கிலே தேசிய இனங்களாக வாழ்கின்ற தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் பிரிந்து நிற்பதைவிட இணைந்து வாழ்வதுதான் காலப் பொருத்தமாகவும் சாலப் பொருத்தமாகவும் உள்ளதென்பது அனுபவ வாயிலான, வெளிப்படையான உண்மையாகும் என்றார்.

Related Posts