தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியடைந்துள்ள இன்றையநாளில் (19-12-2016) , மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.
எதுவித தனிப்பட்ட , சுய அரசியல் நலன்களை விடுத்து இனத்தின் நலனை மட்டும் இலக்காக கொண்டு நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இயங்கவேண்டிய காலத்தின் தேவைப்பாட்டை உணர்ந்து தமிழ் மக்கள் பேரவை 19/12/2915அன்று முதன்முறையாக தனது உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டிருந்தது.
எனினும் , நீங்கள் அனைவரும் அறிந்த வகையில் , ஆயுதமோதல்களின் முடிவிற்கு பின்னரான சூழ்நிலையில் , எம் மத்தியில் நிலவிவந்த மற்றும் திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்ட குழப்பகரமான சூழ்நிலைகள், தேர்தல் அரசியலுக்கு அப்பாலான, இப்படியான , கொள்கைவழி ஒன்றிணைவு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்திநின்றது.
அதற்கான முன்முயற்சிகள் ஏறத்தாழ நான்குவருடங்களாக பலமட்டங்களில் நடைபெற்று வந்து , கடந்த வருட இறுதியில் தமிழ் மக்கள் பேரவை செயற்பட ஆரம்பித்தது.
இந்த ஒன்றிணைவுக்காக உழைத்த அனைவருக்கும், இனத்தின் நலன்கருதி. கொள்கைவழிப்பட்டு ஒன்றிணைந்த அனைவருக்கும், எமது நன்றிகள்.
எதிர்காலம்பற்றிய கேள்விக்குறியுடன் நின்றிருந்த மக்களுக்கு தமிழ் மக்கள் பேரவையின் தொடக்கமும் செயற்பாடுகளும் மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருக்கின்றன என்பது மக்களுடன் நிற்கும் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு வெளிப்படையான விடயமாகும்.
அதே நேரம் மக்களின் இந்த எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் எமது கடப்பாடுகளையும் பொறுப்புகளையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றபடி, எமது இனத்தின் அபிலாசைகளை முன்னிறுத்தி, எமக்காக இழைக்கப்பட்ட அர்ப்பணிப்புகளை மனதில் கொண்டு, நாம்தொடர்ந்தும் மக்களுக்காக உழைப்போம் என இத்தருணத்தில் உறுதிகொள்ளுகிறோம்.
இத்தருணத்தில் கடந்த ஒருவருடத்தில் நாம் செய்தவைகளையும் மீள நினைவுபடுத்தல் அவசியமாகின்றது.
எமது அனைத்து செயற்பாடுகளும் எந்த ஒரு தனி மனிதருக்கோ அல்லது தனிஅமைப்புகளுக்கொ சொந்தமானதல்ல, எவரும் அப்படி உரிமை கோருவதும் இல்லை. இவை அனைத்தும், எமது தேசத்தின் பெயரிலான அனைவரினதும் கூட்டுமுயற்சியே.உண்மையில் இப்படியாக எம்மத்தியில் தனி நபர்களையோ அமைப்புகளையோ முன்னிலைப்படுத்தாத , கோட்பாடுகளை மட்டும் முன்னிலைப்படுத்துகின்ற தேச நலன்சார்ந்த ஒருகூட்டுமனோநிலையை உருவாக்கியதுதான் தமிழ் மக்கள் பேரவை ஆற்றிய மிகக்காத்திரமான பணி என நான் நம்புகிறேன்.
பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு மிகக்குறுகிய காலத்தினுள் , இலங்கை இனப்பிரச்சினையின் தீர்வு குறித்தான தமிழர் தரப்பு தீர்வு வரைபு ஒன்று, துறைசார்நிபுணர்களினால் உருவாக்கப்பட்டு, மக்கள் கலந்துரையாடல் மூலம் செழுமைப்படுத்தப்பட்டு முன்வைக்கப்பட்டது. இப்படியாக மக்கள் பங்களிப்புடன் கூடிய தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டது எமது வரலாற்றில் முதன்முறையாக நடந்த ஒருநிகழ்வாக பதியப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு எனும் பெயரில் எமது புதிய அரசியலமைப்பு ஒன்று முன்வைக்கப்பட இருக்கின்ற மிகவும் தீர்க்கமான சூழ்நிலையில், எமது தீர்வுவரைபானது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அதனையொட்டி மக்களிடையே எழுந்த அரசியல் கலந்துரையாடல்களும் விழிப்புணர்வும் “எழுக தமிழ்” பேரெழுச்சியாக யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டம்பர் 24 அன்று வெளிப்பட்டிருந்தது.
ஜனநாயக ரீதியில், எமது அபிலாசைகளை மக்களாகவே எழுந்துவந்து, ஒன்றிணிணைந்து கூறியமை , எமது அரசியல் சார்ந்து உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் பெரும் தாக்கத்த்தை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக ஆயுதமோதல்களின் முடிவிற்கு பின்னரான கால்பகுதியில் ஏற்பட்ட தன்னெழுச்சியான இந்த எழுச்சிப்பேரணியானது, எமது அடிப்படைக்கோட்பாடுகள் மீது மக்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி குறித்து காத்திரமான செய்தி ஒன்றை வெளிப்படுத்தியிருந்தது .
அதன் தொடர்ச்சியாக , எம் தேசத்தின் மீதான இன அழிப்பில் மிகவும் பாதிக்கப்பட்டதும் ,எம் தேசத்தின் மிக முக்கிய பகுதியுமாகிய கிழக்கு மாகாணத்தில் “எழுக தமிழ்” எழுச்சி நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 21 ம் திகதி இடம்பெற இருக்கின்றது.
இது தவிர எமது கலை கலாச்சரக்குழுவினால் , அடையாளச்சிதைப்புக்குட்பட்டு வரும் எமது பாரம்பரிய கலைகளை அங்கீகரித்து மேம்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பில் மாபெரும் முத்தமிழ் விழாவொன்று நடத்தப்பட்டிருந்தது.
இவ்விழாவில் இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பல கலைஞர்கள் பங்குபற்றி அளிக்கை செய்திருந்தனர்.
அத்தோடு, எமது தேசத்தில் நடக்கவேண்டிய அபிவிருத்திப்பணிகள் , குறுகிய கால நலன்களுக்கும் அரசியல் லாபங்களுக்கும் அப்பால்,நீண்டகால நோக்குடன் தீர்மானிக்கப்படவேண்டும் என்ற நோக்கோடு பேரவையின் பொருண்மிய அபிவிருத்திக்குழு செயற்பட்டு வருகின்றது.
இவை தவிர்ந்த கல்விக்குழு மற்றும் பொறுப்புக்கூறலுக்கான குழு என்பன விரைவில் தமது பணிகளை ஆரம்பிக்கும்.
இவற்றிற்கு மேலதிகமாக ,தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளையும், எமது மண்ணில் நடந்த நடக்கும் அநீதிகளையும் உண்மைத்தன்மையுடன் தென்னிலங்கை மக்களுக்கு தெரிவித்ததன் மூலம்,எமது பிரச்சினை மற்றும் அதற்கான நியாயமான தீர்வு குறித்து தென்னிலங்கை மக்களுடன் நேரடியான ஒரு உரையாடலை ” வடக்கு தெற்கு மக்கள் கலந்துரையாடல்” எனும் தொனிப்பொருளில் ஆரம்பித்து வைத்துள்ளோம். இது பல்வேறு மட்டங்களிலும் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளதுடன் , பேரவை மீதும் அதன் செயற்பாடுகள் மீதும் திட்டமிட்டு புனையப்பட்ட அவதூறுகளையும் பெருமளவில் களைந்துள்ளது .
இப்படியாக, இலங்கைத்தீவில் உள்ள சகல சமூகங்களிலுமுள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து எமது மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வுக்கான கலந்துரையாடல்களையும் ஆக்கபூர்வ முயற்சிகளையும் இனிவரும் காலங்களில் பேரவை தொடர்ந்தும் மேற்கொள்ளும்.
அத்தோடு, தமிழர்களின் பிரச்சினைகள் , தீர்வுக்கான தமிழர்களின் எதிர்பார்ப்புகள் என்பனபற்றியும் சர்வதேச சமூகத்தின் அங்கத்தவர்களுடன் தொடர்ந்தும் தொடர்புகளை பேணி விளக்கமளித்து வருகின்றோம்.
இந்நிலையில் , பேரவையின் செயற்பாடுகளில் உள்ள சில போதாமைகள் குறித்தும் நாம் இத்தருணத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
மக்களுக்கான அரசியலை மேலும் மக்கள் மயப்படுத்தி, மக்களுடன் இறங்கி வேலை செய்வதில் , மிகுந்த போதாமை இருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
அத்தோடு, தாயகத்தில் செயற்படும் ஏனைய மக்கள் அமைப்புகளையும் , பொது நோக்கில் , பொது வேலைத்திட்டத்தில் ஒன்றிணைக்கும் செய்ற்பாட்டைப்பொறுத்தவரையில் இன்னமும் பலபடிகள்முன்னேற வேண்டியிருக்கிறது.
அது போலவே, பேரவையில் பெண் பிரதிநித்துவத்தை அதிகரித்து ஒரு சமநிலைக்கு கொண்டுவர எடுத்த முயற்சிகளும் இன்னமும் பூரண வெற்றியை தரவில்லை .
தாயகத்தின் மக்கள் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பேரவையுடன் இணைந்து செய்ற்படமுன்வருவதன் மூலமாகவே இக்குறைபாடுகளை முற்றாக இல்லாமல் செய்ய முடியும்.
இனி செய்ய வேண்டியவை:-
பேரவை செய்ய வேண்டிய செயற்பாடுகள் ஏராளம் இருப்பினும், இன்றைய அரசியல் சூழ்நிலையின் முக்கியத்துவம் கருதி, சில வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.
குறிப்பாக,
- புதிய அரசியலமைப்பு குறித்தும், எமது மக்களின் அபிலாசைகளின் அரசியல் விஞ்ஞான ரீதியான நியாயப்பாடுகள் மற்றும் சாத்தியப்பாடுகள் குறித்தும் , எம் தாயகப்பகுதியெங்கும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவேண்டும்.
- வெறுமனே அரசியல்விஞ்ஞான சொற்களை மாற்றுவதன் மூலமும் வார்த்ததை விளையாட்டுகள் மூலமும் மக்கள் பிழையான திசையில் வழைநடத்தப்படாதிருக்க , மக்களுக்கான அரசியல கலந்துரையாடல்கள் பரவலாக இடம்பெறவேண்டும்.
- பேரவையின் தீர்வுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மீண்டும் மக்கள் மத்தியில் பரவலாக ஆரம்பிக்கப்படவேண்டும்.
- தாயகத்தின் மக்கள் அமைப்புகள் தொழிற்சங்கங்களை எமது மக்களின்நலன் எனும் பொது நோக்கில் ஒன்றிணைக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.
- எமது அபிலாசைகளை முன்வைத்து மக்கள் அணிதிரள்வுகளை தாயகமெங்கும் நடத்த வேண்டும்.
- சர்வதேச அரங்குகளில் எமது பிரச்சினைக்கான நியாயமான தீர்வு எது என்பது பற்றியும் , மக்களின் ஜனநாயக விருப்புபற்றியும் நேர்மையுடன் வெளிப்படுத்தவேண்டும்.
- இலங்கையின் அனைத்து சமூகங்களுடன் புரிந்துணர்வின் அடிப்படையில் எமது பிரச்சினைகளினதும் தீர்வுகளினதும் நியாயப்பாடுகள் குறித்த கலந்துரையாடல்கள் ஒழுங்கமைக்கப்படவேண்டும்.
இன்றைய சூழல், பேரவை உருவாகிய சூழலை விட தீர்க்கமானது.
எமது இனத்தின் இத்தனைகால அர்ப்பணிப்புகளும் மக்கள் எதிர்கொண்ட அத்தனை அவலங்களும் அர்த்தமிழந்து போகக்கூடிய வண்ணம் , சூழ்நிலைகள் கட்டியமைக்கப்படுகின்றமை வெளிப்படையாக தெரிகின்றது.
இனியும் , விவாத திறமையை வெளிக்காட்டும் பட்டிமன்றங்களாக , வார்த்தைவிளையாட்டுகள் மூலம் செய்யப்படும் அர்த்தமற்ற ஏமாற்று அரசியலில் திசைமாறாது , அதை மக்கள் நலன்சார்ந்த அரசியலாக மாற்ற நாம் அனைவரும் முன்வர வேண்டும் .
இது எந்த ஒரு அமைப்புக்கோ அல்லது இனத்துக்கோ எதிரானதோ அல்லது எந்தஒரு அமைப்புக்கோ ஆதரவான கோரிக்கையோ அல்ல.
எமது இனத்தின் நீதிக்கான குரல்.
இவ்வளவு காலமும்நாம் கடந்து வந்த அர்ப்பணிப்புகளுக்கான குரல்,
காலம்காலமாக ஏமாற்றப்பட்டு வந்த எமது மக்களிற்கான குரல்.
இதில், நாம் அனைவரும், மனச்சாட்சியின்படி ஒன்றுபட்டு எமது மக்களின் நீதிக்காக ஒன்று சேர்ந்து உழைக்க முன்வருமாறு எமது மக்கள், மக்கள்செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகள் , ஊடகங்கள் என அனைவரையும் தமிழ் மக்கள் பேரவை உரிமையுடன் அழைக்கிறது.
நன்றி