தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா

தமிழர் தாயகம் இன்று பல வழிகளிலும் ஒடுக்கப்பட்டு, எமது கலாச்சாரம் திட்டமிட்ட வடிவில் சிதைக்கப்பட்டு, தமிழர் கலைகள் அருகி வரும் நிலையில், எமது இளைய சமுதாயம் பல்வேறு தகாத திசைகளில் கவரப்பட்டு தமிழரின் எதிர்காலமே மிகவும் ஒரு கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் இவ்வேளையில், எமக்கான கலைகளை வளர்த்து, கலாச்சாரத்தினை பாதுகாத்து, எமது இளைய சமுதாயத்தை சரியான திசையில் வழி நடாத்துவது இன்றைய வரலாற்றுத்தேவையாகும்.

இந்த வகையில், தமிழ் மக்கள் பேரவையின் கலை கலாசாரத்திற்கான உபகுழுவினர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் தமிழர் தாயகத்தில் மாபெரும் முத்தமிழ் விழா ஒன்றினை ஏற்பாடு செய்கின்றனர்.

தமிழ் மக்கள் பேரவையினரின் முதலாவது முத்தமிழ் விழா, தமிழர் தாயகத்தின் கலையின் பிறப்பிடமாம் மீன்பாடும் மட்டு நகரில் ஒழுங்கு செய்யப்படுகின்றது. இம்முத்தமிழ் விழாவிற்கான ஆரம்ப கட்ட செயற்திட்டங்கள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன், இதற்கான முத்தமிழ் விழாக் குழுவும் உருவாக்கப்பட்டுவருகின்றது. இக்குழுவின் போஷகர்களாக கலையில் பேரார்வமுள்ள மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபு பிறேமானந்த மகராஜ் அவர்களும், மட்டக்களப்பு மறைமாவட்ட பேராயர் அதி. வணக்கத்துக்குறிய ஜோசப் பொன்னையா அவர்களும் செயற்படுகின்றனர்.

எமது முத்தமிழ் விழாக்குழுவில் இணைந்து இம்மாபெரும் முத்தமிழ் விழாவை ஏற்பாடுசெய்து, அதனை செவ்வனே நடாத்திமுடிக்க எம்முடன் உழைக்க விரும்பும் கலைஞர்கள், இளைஞர்கள், யுவதிகள், மற்றும் ஆர்வலர்களை தமிழ் மக்கள் பேரவை அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றது. இதற்கு எமது முத்தமிழ் விழாக்குழுவினருடன் 0710145723 என்ற இலக்க தொலைபேசியூடாக தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் ஐந்து அரங்குகளாக, மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் இம்முத்தமிழ் விழாவில், கலை நிகழ்வுகளை மேடையேற்ற விரும்பும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த கலைஞர்கள், கலைக்கூடங்கள் மற்றும் அமைப்புக்கள் எம்முடன் மேற்குறிப்பிட்ட இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளும்படியும் வேண்டிக்கொள்கின்றோம்.

தாயகத்தில் மிகவும் நீண்ட கால இடைவெளியின் பின் நடைபெற இருக்கும் இம்மாபெரும் முத்தழிழ் விழாவில் எமது புலம்பெயர் உறவுகளும் பங்குகொண்டு கலை ஆக்கங்களை மேடையேற்றி , தமிழைக்காத்து, தமிழ் வளர்க்க ஒன்றாய் உழைப்போம் எனவும், தமிழனாய் தலை நிமிர்ந்து பயனிப்போம் எனவும் வேண்டி நிற்கின்றோம்.

கலை, கலாச்சார உபகுழு,
தமிழ் மக்கள் பேரவை

Related Posts