தமிழ் மக்கள் பேரவையின் கட்சிகளுடனான சந்திப்பு ஆரம்பம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், புலமைசார் வல்லுநர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்ட சுயாதீனக்குழுவே இந்த சந்திப்பை மேற்கொண்டுவருகிறது.

இதன் இரு சந்திப்புக்கள் நேற்று இடம்பெற்ற நிலையில் இன்று தமிழ் மக்கள் பேரவையின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியினருடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது. தொடர்ந்து ஏனைய அரசியல் கட்சிகளுடனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையால் அமைக்கப்பட்ட குழுவானது சுயாதீனமாக இயங்கும் என்பதுடன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்திஜீவிகள், புலமைசார் வல்லுனர்களை குழுவில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் சுயாதீனக் குழு மேற்கொள்ளும்.

தமிழ் அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவை எடுக்கும் வகையில் மேற்படி சுயாதீன குழுவின் அங்கத்தவர்கள் நேற்று (புதன்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி சுகாஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.

மேற்படி இரண்டு சந்திப்புக்களிலும் சுயாதீனக் குழுவின் சார்பில் யாழ். சின்மயா மிஷன் சுவாமி சிதாகாசானந்தா, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஆண்டகை, தென் கயிலை ஆதீன சுவாமிகள் தவத்திரு அகத்தியர் அடிகளார், யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார், சட்டத்தரணியும் சமூக மற்றும் அரசியல் ஆய்வாளருமான சி.அ.ஜோதிலிங்கம், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சமூக செயற்பாட்டாளர் கஜன், வைத்திய கலாநிதி சிவபாலன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

Related Posts