தமிழ் மக்கள் பேரவையின் கருத்துப்பகிர்வும் பிரகடனமும்! : அனைவருக்கும் அழைப்பு

‘எம் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் ‘

தமிழ் மக்கள் பேரவையின் கருத்துப்பகிர்வும் பிரகடனமும்.
செப்டம்பர் 5 – காலை 9 மணி; யாழ் வீரசிங்கம் மண்டபம்

தமிழ் மக்கள் பேரவையானது, துறைசார் நிபுணர்களின் உதவியுடன் சர்வதேச நாடுகளின் அரசியல் அனுபவங்களிற்கேற்ப ,தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் அரசியற்கோரிக்கைகளையும் ஒரு தீர்வு யோசனையாக உருவாக்கி , மக்கள் கலந்தாய்வுடன் அதனை செழுமைப்படுத்தி கடந்த வருடம் வெளியிட்டு இருந்தது .எவர்களாலும் நிராகரிக்க முடியாதவாறு,அது சர்வதேச நியமங்களிற்கமைய அமைந்திருந்தமையை அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

மக்கள் பங்களிப்புடன் உருவான பேரவையின் அந்த தீர்வு யோசனையானது , சிறிலங்கா அரசின் புதியஅரசியலமைப்பிற்கான மக்ள் கலந்தாய்வுக்குழுவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. எனினும்,சிறிலங்கா அரசானது ,வழமைபோலவே , மக்களின் ஜனநாயக விருப்புகளை கிஞ்சித்தும் கருத்திலெடுக்காது, அவற்றைஅடியோடு நிராகரித்து, ஒரு புதிய அரசியலமைப்பை தயாரித்து வருகிறது.

தமிழ் மக்களின் அடிப்படை அரசியற் கோரிக்கைகள் அனைத்தையும் புறந்தள்ளி, ஒரு புதிய அரசியலமைப்பை தமிழர்களுக்கான தீர்வு எனும் பெயரில் கொண்டுவந்து , எமது அரசியல் கோரிக்கைகள் தீர்க்கப்படுவிட்டன எனும் தோற்றப்பாட்டை வெளிக்காட்டி , எமது அரசியல் கோட்பாடுகளை நீர்த்துப்போகச்செய்ய, சிறிலங்கா அரசு எடுக்கும்முயற்சிகள் தற்போது முனைப்புப் பெற்றிருக்கின்றன.

போலியான வார்த்தை ஜாலங்கள் மூலம் அரசியலமைப்பு குறித்து எமது மக்களை குழப்பநிலையில் வைத்திருந்து அதன்மூலம் தனது திட்டத்தை கபடமான முறையில் அடையவே அரசு முயற்சிக்கிறது.

இது தவிர, ஒரு புதிய அரசியலமைப்பானது, தீர்வு எனும் பெயரில் உருவாக்கப்படுகின்ற நேரத்தில் , மக்களின் கவனத்தை அதிலிருந்து திசைதிருப்புவதற்காக ,வௌ;வேறு பிரச்சினைகளை திட்டமிட்ட முறையில் உருவாக்கி,மக்கள் மத்தியில்செயற்கையான முறையில் பேசுபொருளாக மாற்றும் நுண்ணிய சதித்திட்டமும் மிக லாவகமாக முன்னெடுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் மிக விழிப்பாக இல்லாதுவிடின் , அது எம் மக்களின் அனைத்து அர்ப்பணிப்புகளையும் அழிவுகளையும் அர்த்தமற்றதாக்கிவிடும் .விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி.

இந்த சமயத்தில், அரசியலமைப்பு தொடர்பில் ,எமது மக்கள் மத்தியில் அரசியல் விஞ்ஞான ரீதியிலான தெளிவுபடுத்தலையும் விழிப்புணர்வையும் கொண்டுவரும் பணி எம் அனைவருக்கும் உரித்தானது. இந்த அடிப்படையில்,ஒரு மக்கள் இயக்கமாக , இந்த சமூக பொறுப்பில் தமிழ் மக்கள் பேரவையும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது.

அரசியல் விஞ்ஞான ரீதியில், தமிழர்களின் அரசியல் கோரிக்கைளின் அடிப்படைகளையும் அதன் பிரயோகங்கள் மற்றும்அதனை வலியுறுத்த வேண்டியதன் அவசியங்களையும் நடைமுறை அரசியல் நிலைமைகள் குறித்தானஅபிப்பிராயங்களையும் எம் மக்களோடு பகிரும் கலந்துரையாடல் எதிர்வரும் செப்டம்பர் ஐந்தாம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகிறது.

தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவர் நீதியரசர் கௌரவ க.வி. விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடக்க இருக்கும் இந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் துறைசார் நிபுணர்கள் , அரசியல் தலைவர்கள் , சிங்கள, முஸ்லிம் சகோதர முற்போக்கு நேச சக்திகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டு தமது கருத்துகளை பகிர இருக்கின்றார்கள் .

இந்த கலந்துரையாடலின் நிறைவாக , எம் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தி , நாம் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வின் அடிப்படைக்கூறுகள் குறித்த பிரகடனம் ஒன்றும் வெளியிடப்பட இருக்கிறது.

முக்கியமான இந்த காலகட்டத்தில், எமது அரசியல் அடிப்படைகளை பிரகடனப்படுத்தும் இந்நிகழ்வில், அனைவரும் கலந்துகொண்டு , இந்த பிரகடனத்தின் பங்காளிகளாக மாறவேண்டும் என நாம் அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.

எம்மத்தியிலான வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து , இனத்தின் நலனை கருத்திற்கொண்டு கோட்பாட்டு ரீதியில் அனைவரும் ஒன்றுபட்டு இயங்க முன்வருமாறு நாம் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
தமிழ் மக்கள் பேரவை
01-09-17

Related Posts