தமிழ் மக்கள் பேரவையின் இரங்கல் செய்தி

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் மறைவையொட்டி தமிழ் மக்கள் பேரவை ஆழ்ந்த
கவலையடைகிறது. தமது முதல்வரை இழந்து நிற்கும் தமிழக மக்களின் துயரில் ஈழத்தமிழர்கள் சார்பில் தமிழ் மக்கள் பேரவை தனது இரங்கல்களை தெரிவிக்கின்றதோடு உங்களின் துயரையும் பகிர்ந்து கொள்கினறோம்.

அமரர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர்கள் சார்பில் ஆற்றிய காத்திரமான பங்களிப்புகள் என்றும் எம்மக்களால் நன்றியுடன் நினைவு கூரப்படும். ஈழத்தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்டது இனப்படுகொலையே என்றும், அதற்கு சர்வதேச விசாரணையே அவசியம் என்பதையும், ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவிதியை தாமே தீர்மானிக்கும் தகைமையுடையவர்கள் என்பதையும், மிக ஆணித்தரமாக , சட்டசபைத் தீர்மானங்களாக வெளிப்படுத்தி, சர்வதேச அரங்கில் எமது கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்தவர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்.

வெளிநாடொன்றின், சட்டமன்றில் எமது மக்களின் நீதிக்கான கோரிக்கையை வெளிப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றியமை, எமக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது , இனியும் அமையும் . இதற்காக அவர் எத்தனையோ சவால்களை எதிர்கொண்டிருந்த போதிலும் , தன் மக்கள் பிரதிநிதிகளின் துணை கொண்டு அவற்றை நிறைவேற்றியிருந்தார்.

எம் தமிழக உறவுகள், தம் சகோதர உணர்வால் எம்மை அணைத்துக்கொண்ட நிகழ்வுகளாகவே நாம் அதனை பார்க்கின்றோம். இவற்றிற்கு அப்பால், அமரர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் ஆளுமையும் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது. பெண் ஒடுக்குமுறை நிறைந்த தென்னாசிய சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்பிய ஒரு மிகச்சிறந்த பெண் ஆளுமையாக அவரை நாம் பார்க்கின்றோம். தன் தனிப்பட்ட வாழ்விலும் , அரசியல் வாழ்விலும் எதிர்கொண்ட தடைகளை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு, தனக்கான பாதையை தானே அமைத்துக்கொண்ட தீர்க்கமான ஒரு இரும்புப் பெண்மணியாகவே அவரை நாம் பார்க்கின்றோம்.

பெண் ஒடுக்குமுறை மலிந்த ஒரு சமூகத்தில் இருந்து வெளிவந்து , தன் ஆளுமையை வெளிக்காட்டி உயர்ந்து நின்ற அவரின் ஆளுமை, அனைவருக்கும் ஒரு உதாரணமாக அமைகிறது. இழப்பின் துயரத்தை அறிந்தவர்கள் நாங்கள் . இந்த ஆளுமையின் இழப்பு தமிழக மக்களை பொறுத்தவரையிலும் உலகத்தமிழ் மக்களை பொறுத்தவரையிலும் ஈடுசெய்யப்படமுடியாதது.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் தாய்த்தமிழக மக்கள் அனைவருக்கும் எமது அனுதாபங்களை மீண்டும் தெரிவிப்பதுடன், உங்கள் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

தமிழ் மக்கள் பேரவை
06.12.2016

Related Posts