Ad Widget

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு முன்மொழிவுகள் வெளியாகியது

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டார்.

தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான உப குழுவின் அறிக்கையின் விபரம் வருமாறு.

தமிழ் மக்கள் பேரவையானது அரசியல் தீர்வு ஒன்று தொடர்பில் மக்கள் மத்தியில் கலந்தாய்வு ஒன்றை நடத்துவதற்கு உதவும் வகையில் அரசியல் தீர்வு தொடர்பிலான முக்கிய வரையறைகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றைத் தருமாறு பணித்து 27 டிசம்பர் 2015 அன்று ஓர் உபகுழுவை நியமித்தது.

பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக குழுக்களின் பிரதிநிதிகளும் இவ் உப குழுவில் இடம் பெற்றனர். 2016ஜனவரியில் இடம்பெற்ற பல சுற்று கலந்துரையாடல்களின் பின்னர் இந்த உப குழுவானது இவ்வறிக்கையை பேரவையின் கவனத்திற்கும், அதனைத் தொடர்ந்து மக்கள் கலந்துரையாடலுக்குமாக சமர்ப்பிக்கின்றது.

அரசியலமைப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு முன் அரசியல் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதன் தேவைப்பாடு. புதியதோர் அரசியல் தீர்வு ஒன்றை கண்டறிவது என்பதுவெறுமனே புதியதோர் அரசியலமைப்பை எழுதுவதன் மூலம் எட்ட முடியாது.

இலங்கை ஓர் சிங்கள பௌத்த தேசிய அரசாக இருப்பதே தேசிய இனப்பிரச்சினையின் மூலவேர் ஆகும். தற்போதைய இலங்கை அரசில் (அரசு என்பது அரசாங்கத்தில் இருந்து வேறுபடுத்தி அணுகப்படுகின்றது) முழு அரசும் ஒரு தேசத்தோடும் ஒரு மக்கள் கூட்டத்தோடும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

இங்கு அரசானது ஓர் அதிகாரப் படிநிலையை கொண்டிருப்பதும் அவ் அதிகாரப் படிநிலையில் சிங்கள பௌத்த அரசு முதல் நிலையில் இருப்பதுமே இங்கு பிரதான பிரச்சனையாகும். இந்த அதிகாரப் படிநிலையானது ஒற்றையாட்சி முறைமையின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

தெற்கில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளும் ஒற்றையாட்சியின் பாற்பட்ட சிங்கள பௌத்த அரசு என்ற கருத்தியலில் உறுதியாக இருக்கின்றனர். இந்த கருத்தியல் தமிழ் அரசியல் அபிப்பிராயத்தின் எந்த வகையினருக்கும் ஏற்புடையதல்ல.

ஆகவே தான் அரசு தொடர்பில் எல்லோராலும் பகிர்ந்து கொள்ளப்படும் ஓர் அடிப்படை பார்வை இல்லாது, ஓர் அரசியலமைப்பு ஆக்க முயற்சியில் நாம் ஈடுபட முடியாது என்று நாம் சொல்கின்றோம்.

இலங்கையானது ஓர் மதசார்புப்படி முறையற்ற அரசாக உருவாவதற்கு சிங்கள பௌத்த சமூகமானது இலங்கையின் பல்வேறு மக்கள் கூட்டங்களுக்கிடையே ஓர் சமூக ஒப்பந்தம் ஒன்று தேவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வொப்பந்தம் ஊடாக ஓர் புதிய பல்தேசிய இலங்கை அரசு ஒன்று தோற்றம் பெற வேண்டும். இதன் அர்த்தம் யாதெனில் தமிழ் மக்களினது தனித்துவமும் அவர்களது சுய நிர்ணய உரிமையும் முஸ்லிம், மலையக தமிழ் மக்களின் அரசியல் விருப்பார்வங்களும் அங்கீகரிக்கப்படல் ஆகும்.

1978அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணம்,  அது ஒற்றையாட்சி முறைமைக்குள் இருந்தமை மட்டுமல்லாது சிங்கள பௌத்த தேசத்தை உச்சத்தில் கொண்டிருந்த ஓர் அதிகாரப் படிநிலையுடன் கூடிய அரசிற்குள் உள் வாங்கப்பட்டமையாலும் என்பது விளங்கிக் கொள்ளப் பட வேண்டும்.

இந்த அதிகாரப் படிநிலையோடு கூடிய அரசு என்ற கருத்தியல் நிலை மாறாவிட்டால் சமஷ்டி அரசியலமைப்பு வந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படாத ஒன்றாகவே இருக்கும்.

இதன் காரணமாகவே அரசியலமைப்பு ஏற்பாடுகளை பற்றி நாம் பேசத் தொடங்க முன்னர் தமிழ் மக்கள் கூட்டத்தினது தனித்துவமும் சுயநிர்ணய உரிமையும் ஓர் அரசியல் உடன்படிக்கை ஒன்றின் மூலம் அங்கீகரிக்கப் பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

இத்தகையதொரு சிந்தனை நெறியில் இருந்து தான் புதிய அரசியலமைப்பின் ஏற்பாடுகளை பற்றி பேச முடியும். இத்தகைய சிந்தனை மாற்றம் இல்லாதவிடத்து கடந்த கால அரசியலமைப்பாக்க முயற்சிகள் போன்றே இம்முறையும் அரசியலமைப்பாக்க முயற்சி பெரும்பான்மைவாத தன்னிச்சையான முயற்சியாக அமைந்து விடும்.

அரசியலமைப்பு ஆக்க முயற்சிக்கு முன் எட்டப்படவேண்டிய அரசு தொடர்பான தொலை நோக்குப் பார்வையானது ஓர் உடன்படிக்கை வடிவில் (பொஸ்னியாவில் கைச்சாத்திடப்பட்ட டேய்டன் உடன்படிக்கை, வட அயர்லாந்து பிரச்சினை தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட குட் ஃப்ரைடே உடன்படிக்கை போன்றவொரு உடன்படிக்கை) சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவேண்டியது அவசியமாகும்.

இவ்வுடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களில் தமிழர்களின் தேசம் என்ற அங்கீகாரம், அவர்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை, கூட்டாட்சி அதிகாரம் பாரம்பரிய தாயகம் ஆகியன உள்ளடங்கும்.

எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்கள பௌத்த சமூகமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் இந்த உடன்படிக்கையை தன்னிச்சையாக கிழித்தெறிந்தால் வேறு மாற்று வழிகள் எதுவும் இல்லாத விடத்து தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடும் இந்த உடன்படிக்கையில் உள்வாங்கப் பட வேண்டும்.

இவ்வுடன்படிக்கயானது மூன்றாம் தரப்பொன்றால் (அமெரிக்கா, இந்தியா போன்ற அரசொன்றால்) அல்லது ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உடன்படிக்கையாக இருக்க வேண்டும்.

அரசியலமைப்பு ஒன்று உள்நாட்டு சட்டத்தோடு மட்டுப்படுவதாக கருதப்படுவதால், இவ்வுடன்படிக்கை மூலமாக மூன்றாம் தரப்பொன்றின் பங்குபற்றலை உள்வாங்குவதானது எட்டப்பட்ட அரசியல் தீர்வின் நிலைத்தகு தன்மையை ஓர் சர்வதேச வெளித் தரப்பு ஒன்றின் உத்தரவாதத்தின் ஊடாக நிலை பெறச் செய்ய உதவும்.

மேலும் இவ்வுடன்படிக்கையானது பொறுப்புக் கூறல் மற்றும் நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளின் விடுவிப்பு, காணாமல் போகச் செய்யப்பட்டோரின் பிரச்சனைகள், இராணுவமய நீக்கம், அரசால் செய்யப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள்,

பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு, குற்றங்கள் மீள நிகழாமை தொடர்பான உறுதியளிப்பு தொடர்பிலானவை போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் உடன்பாடுகளை எட்டிய ஓர் உடன்படிக்கையாக இருக்க வேண்டும்.

மேற் சொன்ன விடயங்களில் முன்னேற்றம் இல்லாமல் அரசியலமைப்பு விவகாரங்களை பற்றிய திறந்த பாதுகாப்பான உரையாடல் ஒன்று வடக்கு கிழக்கில் நடை பெற முடியாது.

அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கான முன்மொழிவுகள்,

1. இலங்கை அரசின் தன்மை

1.1. இலங்கை ஓர் பல்தேசிய, கலாசார, மொழித்துவ, மத அரசாகும். அது தனது அங்கத்துவ மக்கள் கூட்டங்களையும் , சமூகங்களையும்கொண்டமைந்தது ஆகும். மத்தியும் மாநிலங்களும் மக்கள் கூட்டங்களின், சமூகங்களின் பன்மைத்துவத்தை மதித்து, அங்கீகரித்து, பாதுகாக்கும் கடப்பாட்டை கொண்டவை.

1.2. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் ஏனைய சமூகங்கள் பல்தேசிய இலங்கையை உருவாக்குகின்றன.

1.3. 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ்த் தேசத்தின் பாரம்பரிய தாயகமாக இருக்கும் காரணத்தினால் அதன் ஆள்புலபரப்பாக அமையப் பெறும்.

1.4. தமிழ் மக்கள் பாரதீனப்படுத்த முடியாத சுயநிர்ணய உரிமையைக் கொண்ட மக்கள் கூட்டமாவர். தனது சுயநிர்ணய உரிமையை ஏற்று அங்கீகரிக்கும் இடத்து பிளவுபடாத ஒற்றுமையான இலங்கை அரசிற்கு தமிழ் மக்கள் தமது பற்றுறுதியை வெளிப்படுத்துகின்றனர்.

2. இறைமை

2.1. இறைமை தனித்துவாமான மக்களுக்குரியதும் பாரதீனப்படுத்த முடியாததும் ஆகும். முழு சமஷ்டி அரசின் இறைமையும் அதன் அங்கத்துவ மக்கள் கூட்டங்களின் இறைமை மூலம் உய்த்தறியப்படுவதாகும்.

2.2. சட்டவாக்க இறைமையானது மத்திய பாராளுமன்றத்தாலும் மாநில சட்டவாக்க அவைகளாலும் தமக்கென அரசியலமைப்பால் குறித்தொதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலமாக தனித்துவமாக பிரயோகிக்கப்படும்.

2.3. நிறைவேற்று அதிகார இறைமையானது மத்திய அரசாங்கத்தின் பிரதம மந்திரியாலும் அமைச்சரவையாலும் மாநில அரசாங்கத்தின் முதலமைச்சராலும் மாநில அமைச்சரவையாலும் அரசியலமைப்பில் விதந்துரைக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு ஏற்ப பிரயோகப்படுத்தப்படும்.

2.4. நீதித்துறை சார் இறைமை அதிகாரங்கள் அரசியலமைப்பு நீதிமன்றத்தாலும் மத்திய, மாநில நீதித்துறையாலும் அவற்றுக்கென விதந்துரைக்கப்பட்ட நியாயாதிக்கங்களுக்கு ஏற்றவாறு பிரயோகிக்கப்படும்.

2.5. இவ்வரசியலமைப்பால் விதந்துரைக்கப்படும் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் மத்திய மாநில அரசாங்கங்கள் மதித்து, பாதுகாத்து அவை மக்களால் அனுபவிக்கப்படுவதை உறுதி செய்யப் படுதலும் வேண்டும்.

மத்தியாலோ மாநிலத்தாலோ அரசியலமைப்பால் விதந்துரைக்கப்பட்ட வழிகளால் அன்றி அடிப்படை உரிமைகள் சுருக்கப்படவோ, நிராகரிக்கப்படவோ, மட்டுப்படுத்தவோ முடியாது.
2.6. வாக்குரிமையானது மத்திய பாராளுமன்றம், மாநில சட்டவாக்க சபை தேர்தல்களிலும், பொது ஒப்பங்கோடல்களிலும் 18வயது நிரம்பிய ஒவ்வொரு பிரஜைக்கும் உரியதாகும்.

2.7. ஒவ்வொரு மாநில அரசும் தனது மாநிலத்திற்குட்பட்ட சிறுபான்மையினரது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் கடப்பாடுடையது.

3. அரசியலமைப்பின் மீயுயர்வுத் தத்துவம் மத்தியினதும் மாநிலத்தினதும் அதியுயர் சட்டமும் அத்திபாரமுமாக அரசியலமைப்பு இருக்கும். மத்தியினதும் மாநிலத்தினதும் அனைத்து செயற்பாடுகளும் அரசியலமைப்போடு இயைந்ததாக இருத்தல் வேண்டும்.

4. மொழி, மதம், பிரஜாவுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்

4.1. இலங்கை ஒரு மதச் சார்பற்ற குடியரசாக இருக்கும். அரசு அனைவரினதும் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை மதிப்பதோடு எல்லா மதங்களையும் சரிசமனாக நடாத்தும்.

4.2. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியன அரசின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்கும்.

4.3. வடக்கு கிழக்கில் தமிழும் ஏனைய இடங்களில் சிங்களமும் நீதிமன்ற மொழியாகவும் பொது ஆவணங்களின் மொழியாகவும் இருக்கும்.

4.4. தமது மொழி, நிர்வாக மொழியாக இல்லாதவிடத்தும் அனைத்து பிரஜைகளும் தமது மொழியில் நீதிமன்றத்தையும் பொதுச் சேவையையும் பெற்றுக் கொள்ள உரித்துடையவர்கள் ஆவார்கள்.

4.5. 04 பெப்ரவரி 1948 அன்று இலங்கையை இயல்பாக வதிவிடமாகக் கொண்ட அனைவரும் அவர்களது வழித் தோன்றல்களும் இலங்கைப் பிரஜாவுரிமைக்கு உரித்துடையவர்கள் ஆவார்கள். பிறப்பால், பதிவால் பிரஜா உரிமை என்ற வித்தியாசம் இருக்க மாட்டாது.

4.6. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பொருத்தனையின்அண்மித்த பிரதியாக அமையும் அடிப்படை உரிமைகள் சாசனம் ஒன்று அரசியலமைப்பில் இருத்தல் வேண்டும்.

இவை நீதிமன்றங்களால் வழக்காடப்படக் கூடிய உரிமைகளாக இருக்க வேண்டும். தென்னாபிரிக்க அரசியலமைப்பில் இருப்பதற்கு ஒப்பான பொருளாதார, சமூக, கலாசாரம் சார் உரிமைகளும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

5. ஆட்சி முறைமை

5.1. இலங்கை ஓர் சமஷ்டி குடியரசாக இருக்கும்.

5.2. அதில் இரண்டு மட்டத்திலான அரசாங்கம் இருக்கும்: மத்தி மற்றும் மாநிலம்.

5.3. சமஷ்டியின் கூறுகளாக மாநிலங்கள் இருக்கும். அத்தகைய மாநிலங்களில் ஒன்றாக தற்போதைய 1978 அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கொண்ட வடக்கு கிழக்கு மாநிலம் அமையப் பெறும்.

5.4. மத்திய அரசாங்கமானது வெஸ்ட்மினிஸ்ரர் முறையிலான ஆட்சி முறையில் இருத்தல் வேண்டும்.

5.5. அரசாங்கத்தின் இரு மட்டத்திலும் உள்ள தேர்தல் முறைகள் ஜெர்மனியில் இருப்பது போன்ற கலப்பு தேர்தல் முறையை பின்பற்றியதாக இருக்க வேண்டும்.

5.6. சமஷ்டி அரசின் சனாதிபதி பாராளுமன்றின் இரண்டு அவைகள் மற்றும் மாநிலங்கள் அவையின் உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் கல்லூரியொன்றினால் தெரிவு செய்யப்படுவார்.

5.7. தத்தமது சட்ட வரையறைகளின் ஊடாக மாநிலங்கள் தமது ஆட்சி முறைகளை சமஷ்டி அரசியலமைப்போடு முரண்படாத வகையில் உருவாக்கிக் கொள்ளலாம்.

5.8. 1978 அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தை ஒட்டிய அரசியலமைப்பு பேரவை ஒன்று இருத்தல் வேண்டும்.

குறிப்பு:

அ) வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தனித்துவத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். முஸ்லிம் சமூகத்தால் இணைந்த வடக்கு கிழக்கில் தமது குழு சார் உரிமைகளை நிறுவன ரீதியாக பாதுகாப்பதற்கு எடுக்கும் முன்வைப்பு எதுவாயினும் அது தொடர்பில் அவர்களுடன் கலந்தாய்வு செய்யத் தயாராக இருக்கின்றோம் என பற்றுதியுடன் கூறிக் கொள்கிறோம்.

ஆ) வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள பிரஜைகள் யாவரும் அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் யாவற்றினையும் வடக்கு கிழக்கில் அனுபவிக்கும் உரித்துடையவர்கள் ஆவர். மேலும் வடக்கு கிழக்கு மாநிலத்தால் மேலதிகமாக வழங்கப்படும் மனித உரிமைப் பாதுகாப்பு அவர்களுக்கும் உரித்துடயதாக இருக்கும்.

இ) அதேவேளையில் தமது வாழ்விடங்களில் அவர்களது ஒன்றுபட்ட அக்கறையை பாதுகாப்பதற்கான அமைப்புமுறைசார் உரிமைகளுக்கான வழிமுறைகளை நோக்கிய மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்கான எமது அர்ப்பணிப்பை நாம் வெளிப்படுத்துகின்றோம்.

இது தொடர்பில் மலையக அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூகங்களுடனும் வேலை செய்வதற்கு நாம் முழுமையாக எம்மை அர்ப்பணிக்கின்றோம்.

மத்திய மட்டத்திலான பகிரப்பட்ட ஆட்சி

6. இரண்டாவது அவை

6.1 செனட் என்று அழைக்கப்பட வேண்டிய இரண்டாவது அவையில் அனைத்து மாநிலங்களும் சமமான பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கும். ஒவ்வொரு மாநில சட்டவாக்க சபைகளும் விகிதாசார வாக்கு அடிப்படையில் தலா 9 உறுப்பினர்களை செனட் அவைக்கு தெரிவு செய்யும்.

6.2 ஒவ்வொரு சட்டமூலமும் ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பாக கீழவை மற்றும் செனட் அவை ஆகிய இரண்டு சபைகளினாலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஏதேனும் சட்டமூலமானது செனட் அவையினால் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அது சட்டமாக ஆக்கப்பட முடியாது.

6.3 ஒரு சட்டமூலமானது தமது மாநிலத்தின் நலன்களுக்கு குறிப்பாக குந்தகமாக அமைவதாக வடக்கு – கிழக்கு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருதுமிடத்து குறித்த சட்டமூலமானது அதன் இரண்டாவது வாசிப்புக்காக விடப்படலாகாது.

ஒரு சட்டமூலமானது வடக்கு கிழக்கு மாநிலத்தின் நலன்களுக்கு குறிப்பாக குந்தகமாக அமைகின்றதா என்பது தொடர்பான விடயமானது பிணக்கிற்குட்படுத்தப்படும் போது, அது தொடர்பிலான விவாதமொன்றைத் தொடர்ந்து அவைத்தலைவர் குறித்த விடயம் தொடர்பில் முடிவெடுக்க முடியும்.

அவைத்தலைவரின் குறித்த தீர்மானமானது அரசியலமைப்பு நீதிமன்றினால் மீளாய்வுக்குட்படுத்தப்பட முடியும்.

7. மாநில ஆளுநர்

7.1 முதலமைச்சரின் ஆலோசனையின்மீது ஆளுநரானவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டும்.

7.2 ஆளுநரின் பதவியானது அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் சம்பிரதாயபூர்வமானதாகும்.

7.3 மாநில சட்டவாக்க சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறும் உறுப்பினரை முதலமைச்சராக ஆளுநர் நியமிக்க வேண்டும். முதலமைச்சர் மாநில அமைச்சர்களை நியமிக்க வேண்டும்.

8. மத்தியினதும் மாநிலத்தினதும் அதிகாரங்கள்

8.1. அரசாங்க அதிகாரங்கள் மத்திக்கும் மாநிலத்திற்கும் இடையே பகிரப்படும்.

8.2. சமஷ்டி நிரல் என அழைக்கப்படும் நிரல் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை கொண்டமையும்.

8.3. சமஷ்டி நிரலில் இல்லாத அனைத்து அதிகாரங்களும், மாநில நிரலில் நிரல்படுத்தப்பட்டுள்ள அதிகாரங்கள் உள்ளடங்கலாக, மாநிலத்தின் அதிகாரங்கள் ஆகும்.

8.4. மத்தியும் மாநிலமும் தத்தமது அதிகார தத்துவங்களில் மீயுயர்வானவை.

குறிப்பு:

கீழே காணப்படும் மாநில நிரல் வடக்கு கிழக்கிற்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் எவை என்ற பார்வையில் முன் வைக்கப்படுகின்றது. பல்கூறு சமஷ்டி ஏற்பாட்டிற்கு நாம் எதிரானவர்கள் அல்ல என்றாலும் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே அளவான அதிகாரங்கள் இருக்க வேண்டுமா (சமச்சீரான சமஷ்டி) என்பது தொடர்பில் நாம் இங்கு கருத்துக்கூறவில்லை.

வடக்கு கிழக்கு மாநிலத்தைப் போலல்லாது இலங்கையின் வேறெந்தப் பாகமும் சுயாட்சியைக் கோரவில்லை. மேலும் நாங்கள் இலங்கையின் மற்றைய மாநிலங்கள் குறைந்த அதிகாரங்களை வைத்திருப்பது போலல்லாது வடக்குக் கிழக்கு மாநிலமானது சமச்சீரற்ற அதிகூடிய அதிகாரங்களை அனுபவிப்பதை அங்கீகரிக்கின்றோம்.

மாநில நிரல்

1. காணி

2. சுகாதாரமும் சுதேச மருத்துவமும்

3. உயர்கல்வி, பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலாக கல்வியும் கல்விச் சேவைகளும்

4. கமத்தொழிலும் கமநலசேவைகளும்

5. நீர்ப்பாசனம்

6. விலங்குவேளாண்மை

7. கண்டமேடு மற்றும்பொருளாதார வலயம் உள்ளிட்ட வரலாற்றுநீர்ப்பரப்புகள் மற்றும் ஆள்புலநீர்ப்பரப்புக்கள் உள்ளடங்கலான கரையோரவலயங்களுடன் தொடர்புபட்ட மீன்பிடித்தொழில், கனிப்பொருள்கள், சுரங்கங்கள் உள்ளடங்கலான பொருளாதார வளங்கள்.

8. மாநிலத்திற்குள்ளான வனங்கள், சரணாலயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

9. கைத்தொழில்களும் கைத்தொழில் அபிவிருத்தியும்

10. எரிபொருள், மின்சாரம் மற்றும் மின்வலு வழங்கல்

11. சுரங்கங்களும் கனியவளங்களும் குவாரிகளும்

12. போக்குவரத்து

13. மாநில கணக்கெடுப்பும் புள்ளி விபரவியலும்

14. விமான நிலையங்களும் துறைமுகங்களும் இறங்குதுறைகளும்

15. ஆறுகளும் நீர்நிலைகளும்

16. வீதிகளும் பெருந்தெருக்களும்

17. வீடமைப்பும் நிர்மாணத்துறையும்

18. நகர திட்டமிடலும் அபிவிருத்தியும்

19. கிராமிய அபிவிருத்தி

20. உள்ளுராட்சிமன்றங்கள்

21. கூட்டுறவுகள்

22. மாநிலத்திற்குள்ளான உணவு விநியோகமும் பகிர்ந்தளிப்பும்

23. சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு

24. பொது ஆற்றுகைகள் உள்ளடங்கலாக கலாச்சாரச் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல்,

25. தொலைக்காட்சி உள்ளடங்கலான ஒலிபரப்பும் ஊடகமும்

26. நிவாரணங்கள், புனர்வாழ்வு, புனர்நிர்மாணம்

27. சமூகப் பாதுகாப்பு

28. காவல்துறையும் சட்டமும் ஒழுங்கும். (மீன்பிடி உரித்துகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கும் கரையோர வளங்களை பாதுகாக்கும் பொருட்டும் காவல்துறை ஒரு கரையோரப் பாதுகாப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்கமுடியும்)

29. சீர்திருத்தும் நிலையங்கள் மற்றும் சிறுவர் நன்னடத்தை நிறுவனங்களின் நிர்வாகம்

30. மாநில பொதுச்சேவைகள்

31. விளையாட்டுத்துறை

32. மாநிலத்திற்குள்ளான கூட்டிணைக்கப்படாத சங்கங்களையும் மன்றங்களையும் ஒழுங்குபடுத்தல்

33. மாநிலத்தின் கடன்

34. உள்நாட்டு மற்றும் சர்வதேச கடன் மற்றும் உதவி பெறுதல் (சர்வதேச கடன் பெறுதலின் போது குறித்த வரையறையை மீறும் பட்சத்தில் மத்தியின் ஒருங்கியைவு தேவைப்படும்)

35. மாநிலத்துக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு, சர்வதேச நன்கொடைகள், அபிவிருத்திக்கான உதவிகளை ஒழுங்குபடுத்தலும் ஊக்குவித்தலும்.

36. மாநில நிதி மற்றும் கடன் நிறுவனங்கள்

37. மதுவரி தீர்வைகள்

38. பிராந்தியத்தின் மொத்த மற்றும் சில்லறை விற்பனைகள் மீதான விற்பனைப் புரள்வுவரிகள் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிகள்.

39. தேசிய லொத்தர்கள் தவிர்ந்த பந்தய வரிகளும், பரிசுப்போட்டிகளும், லொத்தர்களும் மீதானவரிகள்.

40. மோட்டார் வாகன உரிமம் மற்றும் கட்டணங்கள்.

41. மோட்டார் வாகன மற்றும் ஆதன விற்பனைகள் மீதான முத்திரைக் கட்டணம்.

42. நீதிமன்றங்களினால் அறவிடப்படும் தண்டப்பணங்கள்

43. நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மீதானமுத்திரைக் கட்டணம் உள்ளடங்கலாக நீதிமன்ற கட்டணங்கள்.

44. இறைவரியினை மதிப்பிடுதல், அறவிடுதல் உள்ளடங்கலான காணி வரி அறவீடு மற்றும் வரி அறவிடும்; நோக்கங்களுக்காக காணி பதிவேடுகளை பேணுதலும்.

45. கனிப்பொருள் உரிமைகள் மீதானவரிகள்.

46. மாநில கணக்காய்வு

47. மாநில நிரலில் குறித்துரைக்கப்பட்டவிடயங்கள் தொடர்பில் சட்டங்களை ஆக்குதல்.

48. மாநில நிரலில் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தண்டப்பணம்

49. மாநில மட்டத்திலான திட்டமிடல்

50. மாநிலத்துக்கான சட்ட சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள்

51. தொல்பொருள் மற்றும் பாரம்பரிய அமைவிடங்கள், நூதனசாலைகள், சுவடிகள்

52. மாநிலத்துக்குள்ளான நிர்வாகம்

53. மாநிலத்துக்குள்ளான நீதிநிர்வாகம்

54. மாநில திரட்டுநிதியம்.

மத்திய நிரல்

1. பாதுகாப்பு, மத்திய பந்தோபஸ்து மற்றும் ஆயுதப்படைகள்.

2. மத்திய புலனாய்வுத் திணைக்களம் சமஷ்டி நிரலுக்குட்பட்ட எல்லா விடயங்கள் தொடர்பிலான காவல்துறை அதிகாரங்கள்.

3. குடிவரவு, குடியகல்வு

4. வெளி விவகாரங்கள்

5. தேசிய குடிசன மதிப்பும் புள்ளி விபரமும்

6. நாணயமும் வெளிநாட்டு நாணய மாற்றும், சர்வதேச பொருளாதாரத் தொடர்புகள் நாணயக் கொள்கை.

7. மத்திய அரசுக்கான பொதுக்கடன்கள்

8. மத்திய அரசுக்கான வெளிநாட்டுக் கடன்கள்

9. வங்கி மற்றும் நிதியில் நிறுவனங்களின் ஒழுங்குபடுத்தல்கள்.

10. காப்புறுதி

11. பங்குப் பரிவர்த்தனையும் எதிர்காலச் சந்தை வாய்ப்பும்

12. மத்திய அரசின் கணக்காய்வு

13. தனியாட்களினதும் கம்பனிகளினதும் கூட்டுத்தாபனங்களினதும் வருமானம் மூலதனம் செல்வம் என்பவற்றின் மீதானவரிகள்.

14. மாநில வரிகள் தவிர்ந்த மத்திய அரசுக்கான மொத்த விற்பனை வரவு வரிகளும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிகளும்

15. இறக்குமதி ஏற்றுமதி தீர்வைகள் உள்ளிட்ட சுங்கத் தீர்வைகள்

16. மத்திய அரசினால் அல்லது மத்திய திரட்டு நிதியினால் செலுத்தப்படக் கூடிய ஓய்வூதியம்

17. அணுசக்தி

18. தேசிய மின் உற்பத்தி பராமரிப்பும் முகாமைத்துவமும்

19. சர்வதேச போக்குவரத்து மத்திய அரசின் போக்குவரத்து மற்றும் மத்திய அரசின் புகையிரதப் போக்குவரத்தும்

20. விமானப் போக்குவரத்து

21. மத்திய அரசின் அதிவேக நெடுஞ்சாலைகள்

22. கடலோர வலயம் தொடர்பிலான கடலோரப் பாதுகாப்பு வரலாற்று நீர்ப்பரப்புகள், ஆட்புல நீர்ப்பரப்புகள் உள்ளடங்கலாக பொருளாதார வலயங்கள் கண்ட மேடுகள் உள்ளடங்கலாக, சர்வதேச கப்பற் தொழிலும்; கப்பல் போக்குவரத்தும்

23. மத்திய அரசுக்கான தேர்தல்கள்

24. தபால் மற்றும் தொலைத்தொடர்புகள்

25. மத்திய அரசின் பொதுச்சேவைகள் மற்றும் மத்திய அரசின் பொதுச்சேவைகள் ஆணைக்குழு

26. மருந்துகள், நஞ்சுகள் மற்றும் போதைவஸ்துகள்

27. நீதி நிர்வாகம்

28. மத்திய அரசுக்கான கைத்தொழில் ஆராய்ச்சியும் பயிற்சியும்

29. தரநிர்ணயம் மேம்பாடு சம்பந்தமான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள்

30. ஆக்கவுரிமைகள், புத்தகக்காட்சிகள், வடிவமைப்புகள், பதிப்புரிமை, புலமைத்துவ வியாபாரக் குறிகள், வணிகக் குறிகள்.

31. ஏகபோகவுரிமை இணைப்புகள்

32. மத்திய தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு

33. மத்திய தொல்பொருள்கள் மற்றும் நூதனசாலைகள்

34. மத்திய விளையாட்டுத்துறையின் நிர்வாகம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி

35. இயற்கை அழிவு, பேரிடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தலையீடு செய்தல்

36. தொழில் தரம் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள்

37. பிரஜாவுரிமை

9. காணி

9.1 காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ‘அரச காணி’ என வரையறுக்கப்பட்டவை மாநிலங்களிற்கு உரித்தாகும்.

9.2 மத்திய நிரலின் கீழான விடயங்கள் தொடர்பில் நியாயமாக தேவைப்படும் காணிகள் தவிர தற்போது மத்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் அனைத்தும் மாநிலங்களுக்கு உரித்தாகும்.

இது தொடர்பில் பிணக்கு ஏதும் இருப்பின் அப்பிணக்கானது மத்தியஸ்தத்திற்கு விடப்பட்டு இறுதியாக அரசியலமைப்பு நீதிமன்றினால் தீர்க்கப்படலாம்.

9.3 தற்போது மத்திய நிரலில் இல்லாத விடயம் ஒன்று தொடர்பான அரச காணி மத்தியின் கட்டுப்பாட்டில் இருப்பின் அது மாநிலத்தைச் சேரும்.

9.4 மத்தியின் கட்டுப்பாட்டில் அல்லது ஆட்சியில் உள்ள தனியார் காணிகள் அனைத்தினதும் உடமை அவற்றின் சட்டபூர்வ உரித்தாளரிற்கு கையளிக்கப்படல் வேண்டும்.

9.5 காணி கைமாற்றம், காணி அபிவிருத்தி, காணிச் சீர்திருத்தம், காணி பயன்பாடு, காணி விற்பனை, உள்ளடங்கலாக காணி தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு மாநிலங்களிற்கு பூரண உரித்து உண்டு.

9.6 நடைமுறையில் இருக்கும் சட்டங்கள், ஒழுங்கு விதிகள் அல்லது சுற்று நிருபங்கள் போன்றவை மாநிலத்திற்கு உரித்தாகிய காணி அதிகாரங்கள் தொடர்பில் முரணாக இருக்குமிடத்து அவை வலிதற்றவையாகும்.

9.7 மாநிலத்தினுள் உள்ள காணி ஒன்றை மத்திய நிரலில் உள்ள விடயம் ஒன்றிற்கு பயன்படுத்த மத்தி விரும்புமிடத்து, அதனை மத்திய அரசாங்கம் மாநிலத்திடம் கோரலாம். இது தொடர்பில் பிணக்கு ஏதும் இருப்பின் அப்பிணக்கானது மத்தியஸ்தத்திற்கு விடப்பட்டு இறுதியாக அரசியலமைப்பு நீதிமன்றினால் தீர்க்கப்படலாம்.

9.8 மத்திய நிரலில் உள்ள விடயம் ஒன்றிற்கு மாநிலத்தினால் காணி ஏதாவது வழங்கப்பட்டிருக்குமிடத்து மத்திய அரசாங்கம் அத்தேவைக்கு மாத்திரமே அதனைப் பயன்படுத்தலாம்.

10. உள்ளூராட்சி மன்றங்கள்

10.1 உள்ளூராட்சி சபைகளின் கட்டமைப்பு, அதிகாரங்கள், அமைவு போன்றவை தொடர்பில் மாநிலம் சட்டங்களை இயற்றும்.

10.2 அவ்வுள்ளூராட்சி சபைகள் குறிக்கப்பட்ட மாநிலத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்பதுடன் அச்சபைகள் சட்டத்தின் பிரகாரம் ஒதுக்கப்பட்ட விடயங்களை செயற்படுதுவதுடன் அவ்விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்ட மாநிலத்தின் முகவராகவும் தொழிற்படும்.

10.3 உள்ளூராட்சி சபைகள் உட்பட நிர்வாக அலகுகளின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மாநிலங்கள் அதிகாரமுடையதாக இருக்கும்.

11. பொலிஸ், சட்டம் மற்றும் ஒழுங்கு

11.1 பொது ஒழுங்கு உள்ளிட்ட சட்டம் மற்றும் ஒழுங்கும் பொலிஸ் அதிகாரங்களும் மாநிலங்களின் அதிகாரங்களாக இருக்க வேண்டும். ஆயினும் கொழும்புத் தலைநகரப் பிராந்தியத்துக்கும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே உள்ளிட்ட அதன் சுற்றுப்புறங்களுக்குமாக மத்திக்கும் ஒதுக்கப்படலாம்.

11.2 ஒவ்வொரு மாநிலத்திலும் பொலிஸ் படையொன்று இருக்க வேண்டும் என்பதுடன் அது மாநிலத்துக்குள் பொது ஒழுங்கைப் பேணுவதற்கும்; அத்தகைய குற்றங்களைத் தடுத்தல், கண்டுபடித்தல் புலன்விசாரணை செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்குரைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் பொறுப்பாக இருத்தல் வேண்டும்.

11.3 பொலிசுக்குள் கரையோரப் பாதுகாப்பு பிரிவொன்று உருவாக்கப்படுவதுடன் குறித்த பிரிவானது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீன்பிடி உரிமைகளை உறுதிப்படுத்தவும் கரையோர வளங்களைப் பாதுகாக்கவும் வேண்டும்.

11.4 மத்திய அரசுக்கான நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், கண்டுபிடித்தல் புலன்விசாரணை செய்தல் மற்றும்; வழக்குரைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் சர்வதேச குற்றங்கள் மற்றும் தலைநகரப் பிராந்தியத்தில் இடம்பெறும் குற்றங்கள் போன்றவற்றுக்கு பொறுப்பாக மத்திய புலனாய்வுத் திணைக்களமொன்று உருவாக்கப்படுதல் வேண்டும்.

11.5 ஒவ்வொரு மாநிலத்திலும் பொலிஸ் ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் மத்திய அளவில் மத்திய பொலிஸ் ஆணைக்குழுவொன்றும் உருவாக்கப்படல் வேண்டும்.

11.6 மத்திய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்கள் அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட வேண்டும். மாநில பொலிஸ் ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்கள் மாநில நல்லாட்சிச் சபையினால் நியமிக்கப்பட வேண்டும்.

11.7 மாநில அரசுக்குள்ளாக ஒரு கடுமையான நிலை ஏற்படுகின்ற போது இராணுவத்தை நிலைநிறுத்த வேண்டி, குறித்த மாநில அரசின் முதலமைச்சர் மத்திய அரசின் ஜனாதிபதியின் தலையீட்டைக் கோரலாம்.

இரண்டு வாரங்களுக்கிடையில் மாநில சட்டவாக்க சபை குறித்த முடிவினை பலப்படுத்தாது விட்டால் முதலமைச்சரின் வேண்டுகோள் காலாவதியாகிவிடும்.

12. வெளியுறவுக் கொள்கை

12.1 வெளியுறவுக் கொள்கை மத்திய நிரலுக்குரிய விடயமாக இருக்கும். எப்படி இருப்பினும் மாநில நிரலுக்குரிய விடயம் ஒன்று வெளியுறவுக் கொள்கைத் தீர்மானத்திற்குரிய விடயமாக உள்ளபோது, மாநில அரசின் அத்தியாவசிய நலன்கள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பிலான குறித்த விடயம் பற்றி வெளியுறவுக் கொள்கைத் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது மாநில அரசு அதில் பங்கெடுக்கும்.

மாநில அரசுகளின் அதிகாரங்கள் பற்றியதாக ஒரு விடயம் உள்ளபோது, மாநில அரசின் பங்களிப்பு காத்திரமானதாக இருத்தல் வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாநில அரசுகள் பொருத்தமான வகையில் சர்வதேச இணக்கப்பாடுகளில் பங்கெடுக்கும்.

12.2 வடகிழக்கு மாநில அரசு தனது பொருளாதார, கல்வி, கலாச்சார நலன்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசுக்குரிய தூதுவராலயங்கள் உயர் ஸ்தானிகராலயங்களில் தனக்கான ஒரு அலகினை ஏற்படுத்திக் கொள்வதற்கான உரித்தினைக் கொண்டிருக்கும்.

13. பொதுச் சேவை

13.1 பிரதம செயலாளர், முதலமைச்சரின் செயலாளர், அமைச்சர்களின் செயலாளர்கள் ஆகியோர் முதலமைச்சரினால் மாநில அமைச்சரவையின் ஆலோசனையுடன் நியமனம் செய்யப்படுவர்.

13.2 மாநிலத்தின் அதிகாரத்திற்குட்பட்ட விடயங்களை மேற்கொள்வதற்கு மாநில பொதுச் சேவைகள் ஒன்று ஏற்படுத்தப்படும்.

13.3 அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படும். ஒவ்வொரு மாநில பொதுச் சேவைகளிற்கான ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு, பதவி விலக்கல், ஒழுக்காற்று கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு இவ்வாணைக்குழு பொறுப்பாக இருக்கும்.

மாநில பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மாநில நல்லாட்சிக்கான அவையின் பரிந்துரையின் மீது முதலமைச்சரினால் நியமிக்கப்படுவர்.

13.4 மாநிலத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரின் நியமனங்கள், இடமாற்றம், மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் என்பவற்றை மாநில பொதுச் சேவைகள் ஆணைக்குழு கொண்டிருக்கும்.

மேற் குறித்த உத்தியோகத்தர்கள் பிரதம செயலாளர் அல்லது மாநில அரசாங்கத்தின் ஊடாக மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட பல்வேறுபட்ட செயற்பாடுகளையும் மேற்கொள்வர்.

13.5 மத்திய பொதுச் சேவைகள் ஆணைகுழு மத்திய அரசாங்கத்தின் செயற்பரப்பினுளடங்கும் மத்திய நிரலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தும்.

13.6 மத்திய பொதுச் சேவைகளிற்கான ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு, பதவி விலக்கல், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கு மத்திய பொதுச் சேவைகள் ஆணைக்குழு பொறுப்பாக இருக்கும்.

மத்திய பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் மீது பிரதம மந்திரியால் நியமிக்கப்படுவர்.

14. ஆட்சேர்ப்புக் கொள்கை

14.1 மத்திய பொதுச் சேவைகளுக்கும் பாதுகாப்பு படைக்குமான ஆட்சேர்ப்பானது முழு நாட்டினதும் இன விகிதாசாரத்தினைப் பிரதிபலித்தல் வேண்டும்.

14.2 மாநில பொதுச் சேவைகளுக்கும் காவல்துறைக்குமான ஆட்சேர்ப்பானது அப்பிராந்திய இன விகிதாசாரத்தினைப் பிரதிபலித்தல் வேண்டும்.

15. கல்வி

15.1 கல்வி என்னும் விடயமானது மாநிலங்களுக்கு பாரப்படுத்தப்படல் வேண்டும். இது ஆரம்ப, இடைநிலை மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலான மேல்நிலைக் கல்வி ஆகியவற்றையும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் சார் கல்வி போன்றவற்றை வழங்கும் நிறுவகங்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

15.2 ஏதேனும் பாடசாலை, பல்கலைக்கழகம் அல்லது வேறு ஏதேனும் மேல்நிலைக் கல்வி நிறுவகம் என்பனவற்றை ஆரம்பிப்பதோ அல்லது கொண்டு நடாத்துவதோ மாநிலங்களின் விடயப்பரப்புக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.

15.3 கல்வி நிறுவகங்களில் ஆளணியினரை வேலைக்கமர்த்தல் மற்றும் அவர்கள் மீதான ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு போன்றவை மாநில கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

16. அரசிறை சமஷ்டி

16.1 மாநிலங்கள்; தமது அதிகாரங்களை சுயாதீனமாக பிரயோகிக்ககூடியதாக இருப்பதை அரசிறை ஏற்பாடுகள்; உறுதிப்படுத்த வேண்டும்.

16.2 அரசிறை சமநிலைப்படுத்துகை மற்றும் சமாந்திர சமத்துவம் ஆகியவற்றை அமுல்ப்படுத்துவதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்படும் போது வடக்குக் கிழக்கில் போரினால் ஏற்பட்ட தாக்கம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

16.3 அரசிறை உறவுகள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கு பிணிக்கும் தன்மை வாய்ந்த சிபாரிசுகளை மேற்கொள்ளும் அதிகாரங்களைக் கொண்ட மத்திய நிதி ஆணைக்குழு உருவாக்கப்படல் வேண்டும்.

16.4 வடக்குக் கிழக்கு மாநிலமானது சர்வதேசத்திடமிருந்து நேரடியாக கடன் மற்றும் உதவி பெறுவதற்கான அதிகாரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கின் கடன் சுமையானது மத்திய அரசாங்கத்தின் பொறுப்புடைமையாக இல்லாத வேளையில் மத்திய அரசாங்கத்தில் தலையீடு இன்றி சர்வதேச உதவிகளை நேரடியாகப் பெறுவதற்கான உரிமையையும் கொண்டிருத்தல் வேண்டும்.

கடன்பெறுதலானது மத்திக்கு தாக்கம் ஒன்றை ஏற்படுத்தும் தருணத்தில் மாநிலமானது மத்திய அரசாங்கத்துடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.மத்தி – மாநிலத்திற்கிடையிலான பிணக்குகளைத் தீர்த்தல்

17. அரசியலமைப்பு நீதிமன்றம்

17.1 அரசியலமைப்பு தொடர்பான சகல விடயங்கள் சம்பந்தமாக தீர்ப்பு வழங்குவதற்கான முழுமையான நியாயதிக்கத்தை கொண்டதாக அரசியலைப்பு நீதிமன்றமொன்றானது இருக்க வேண்டும் என்பதுடன் அடிப்படை உரிமைகள் மற்றும் எழுத்தாணை நியாயாதிக்கம் தொடர்பான இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாகவும் அது அமைந்திருக்க வேண்டும்.

17.2 மத்திய பாரளுமன்றம் மற்றும் மாநில சட்டவாக்க மன்றங்களினால் ஆக்கப்படும் சட்டவாக்கங்களை நீதிமுறை மீளாய்வு செய்கின்ற நீதிமன்றமாகவும் அரசியலமைப்பு நீதிமன்றம் அமைந்திருக்க வேண்டும்.

17.3 அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மேற்கொள்ளப்படும் நியமனங்களானவை இலங்கையின் பன்மைத்துவ தேசியத் தன்மையை பிரதிபலிப்பதாக அமைந்திருத்தல் வேண்டும்.

17.4 பிரதமர் மற்றும் மாநிலங்களின் முதலமைச்சர்களைக் கொண்ட அமையமானது (Colloquium) புலமைவாய்ந்த சட்டவாளர்களிலிருந்து 9 உறுப்பினர்களை அரசியமைப்பு நீதிமன்றத்துக்கு நியமனஞ் செய்ய வேண்டும்.

முதலமைச்சர்களும் பிரதமரும் முறையே மாநில நல்லாட்சி பேரவையினதும் அரசியலமைப்புச் சபையினதும் ஆலாசனைகளின் பேரில் செயற்பட வேண்டும்.

17.5 வடக்கு-கிழக்கு மாநில முதலமைச்சரானவர் சமஷ்டி ஏற்பாடுகளின் சமச்சீரற்ற தன்மையின் அடிப்படையில் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு 3 உறுப்பினர்களை நியமித்தல் உரித்துடையவராதல் வேண்டும்.

வடக்கு-கிழக்கு மாநிலம் தொடர்பான வழக்கொன்றின் தீர்ப்பில் வடக்கு கிழக்கு மாநில முதலமைச்சரால் பிரேரிக்கப்பட்ட 3 நீதிபதிகளில் குறைந்தது 2 பேராவது ஒத்துப் போயிருத்தல் வேண்டும்.

17.6 பாராளுமன்றம் அல்லது மாநில சட்டசபையினால் சட்டம் ஒன்று ஆக்கப்படும் போது அதன் அரசியலமைப்புக்கமைவாந்தன்மை பற்றி எவரேனும் ஒரு பிரஜை அரசியலமைப்பு நீதிமன்றில் வழக்கிடலாம்.

18. நீதித்துறை

18.1 ஒவ்வொரு மாநில அரசுக்கும் ஒரு மேன்முறையீட்டு நீதிமன்றம் இருக்க வேண்டும். முதனிலை நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள், நியாய மன்றங்கள் மற்றும் நீதி நிறுவனங்கள் கையாண்ட வழக்குகள், வழக்குரைப்புகள் மற்றும் விடயங்கள் தொடர்பில் மேன்முறையீடு, மீளாய்வு மற்றும் முன்னிலை மீட்பு செய்வதற்கான நீதிமன்றாகவும் முதனிலை நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள், நியாய மன்றங்கள் மற்றும் நீதி நிறுவனங்கள் விடுகின்ற சட்ட மற்றும் நிகழ்வுப் பிழைகளை சீர் செய்கின்ற மேன்முறையீட்டு நியாயாதிக்கத்தை கொண்ட நீதிமன்றாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் செயற்படும்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் எழுத்தாணை நியாயாதிக்கம் தொடர்பில் மாநிலத்துக்குள் முதனிலை நீதிமன்றாகவும் செயற்படும்.

18.2 பாராளுமன்றமும் மாநில சட்டவாக்க சபையும் சட்டத்தால் அளிக்கப்படுகின்ற தத்துவங்கள் தொடர்பில் முதனிலை மற்றும் மேன்முறையீட்டு அதிகாரங்களை பிரயோகிக்கின்ற நீதிமன்றமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் விளங்கும்.

18.3 மத்திக்கான நீதித்துறை உயர் நீதிமன்றத்தை மாத்திரம் கொண்டதாகவும் அது மேன்முறையீட்டுக்கான ,றுதி நீதிமன்றமாகவும் விளங்கும்.

18.4 மாநிலத்துக்கான மாநில முதலமைச்சருடன் கலந்துரையாடி நல்லாட்சிக்கான மாநில அவையினால் நியமிக்கப்படும் மாநில நீதிச்சேவை ஆணைக்குழு தன்னகத்தே மேன்றையீட்டு நீதிமன்றத் தலைவரோடு மேன்முறையீட்டு நீதிமன்றின் அடுத்த ,ரண்டு சிரேஷ்ட நீதிபதிகளைக் கொண்டிருக்கும்.

18.5 மாநிலத்தக்கான ஏனைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளையும் அதன் கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகளையும் நியமிக்கின்ற பொறுப்பினை மாநில நீதிச்சேவை ஆணைக்குழுவானது கொண்டிருக்கும். நீதிபதிகளுடைய ,டமாற்றம் தொடர்பில் மாநில நீதிச்சேவை ஆணைக்குழுவானது மத்திய நீதிச்சேவை ஆணைக்குழுவோடு கலந்துரையாடல் செய்யும்.

19. நல்லாட்சிக்கான மாநில சபை

19.1 முக்கியமான அரசாங்க பதவிகள், அரசாங்க அமைப்புக்களிற்கான நியமனங்கள் சுயாதீனமாக இருப்பதை உறுதிப்படுத்த நல்லாட்சிக்கான மாநில சபை ஒன்று இருத்தல் வேண்டும்.

19.2 அமைவு : முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர்,மாநில சபையின் முதல்வர், முதலமைச்சராலும், எதிர்கட்சித் தலைவராலும் கூட்டாக நியமிக்கப்படும் திறமை வாய்ந்த துறை சார் நிபுணர்கள் எட்டுப் பேரும் கொண்டதாக அமையும். மேற்கூறிய எட்டு சிவில் அமைப்பைச் சார்ந்தவர்களில் ஆகக் குறைந்தது மூன்று பெண்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

19.3 சபையின் பொறுப்பானது :மாநில நீதிச் சேவை ஆணைக்குழு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், பொது சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு,மாநில மன்றாடியார்,மாநில பொலிஸ் ஆணையாளர்,மாநில மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றிற்கு உறுப்பினர்களை நியமித்தல்.

20. மாநில சட்டமா அதிபதி

20.1 நல்லாட்சிக்கான மாநில சபையினால் பரிந்துரைக்கப்படும் ஒருவர் முதலமைச்சரினால் மாநில சட்டமா அதிபதியாக நியமிக்கப்படுவார். அவர் மாநில சட்ட சபையினால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் அரசியலமைப்பிற்கு அமைவான தன்மை பற்றிய ஆலோசனைகளை முதலமைச்சருக்கு வழங்குவார்.

20.2 பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் எதுவும் அரசியலமைப்புக்கு முரணானதாகக் கருதுமிடத்து மாநில சட்டமா அதிபதி முதலமைச்சருடனான கலந்தாலோசனையின் பின்னர் அரசியலமைப்பு

21. அவசர கால அதிகாரங்கள்.

21.1 மாநில அரசாங்கம் ஒன்று சமஷ்டியில் இருந்து பிரிவதற்கான மாநில நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்றும் அவ்வாறான பிரிவு உடனடியானதொன்று என மத்தியின் தலைவர் திருப்திப்படுமிடத்து,

அவர் அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்தலாம். அவ்வாறு பிரகடனப்படுத்துமிடத்து ஆளுநர் நிறைவேற்று அதிகாரங்களையும் மற்றும் முதலமைச்சரினதும் மாநில அமைச்சரவையினதும் அதிகாரங்களையும் அந் நிலமைகளுக்கு ஏற்றவாறு, கையகப்படுத்தலாம்.

21.2 அவசரகால நிலைப் பிரகடனமெதுவும் அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் தன்னியக்கமாகவே பிரகடன தினத்தில் இருந்து ஒரு மாத காலத்தினுள் மீளாய்விற்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

அரசியலமைப்பு நீதிமன்றம் அவசரகால நிலைப் பிரகடனம் சரியானது எனக் தீர்மானிக்குமிடத்து மத்திய அரசின் தலைவர் மாநில சட்ட சபையைக் கலைத்து அவசரகால நிலைப் பிரகடனத் தினத்தில் இருந்து ஆறு மாத காலப்பகுதியினுள் தேர்தலை நடாத்துதல் வேண்டும்.

அவசரகால நிலைப் பிரகடனம் நியாயப்படுத்த முடியாது என அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்மானிக்குமாயின் அவசர கால நிலை உடனடியாக அதன் சட்ட அந்தஸ்தையும் வலுவையும் இழந்து விடும்.

21.3 மேலே கூறியவாறு அவசரகால நிலை வலுவிழந்ததும், முதலமைச்சரும் மாநில அமைச்சரவையும் தொடர்ந்து பதவியில் இருப்பதோடு அவர்கள் இடைக்காலப் பகுதியில் நடைபெற்ற எந்த செயல், செயற்பாடுகளுக்கும் கட்டுப்பட மாட்டார்கள்

22. மத்தி-மாநிலங்கள், மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு

22.1 மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கும் மத்திக்கும் இடையேயும் ஏற்படும் பிணக்குகளை கலந்தாலோசித்து சுமூகமான தீர்வு காண்பதற்கு விசேட சபைகளும் ஏற்பாடுகளும் செய்யப்படல் வேண்டும்.

22.2 பிணக்குகளைத் தீர்ப்பதற்கான வெளி ஒன்றை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசினால் முதலமைச்சர்களின் நிரந்தர மாநாடு ஒன்று கூட்டப்படல் வேண்டும்.

22.3 கல்வி, போக்குவரத்து போன்ற விடயங்களிற்கு தேவை ஏற்படும் இடத்து விசேட சபைகள் உருவாக்கப்படலாம்.

23. அரசியலமைப்புத் திருத்தங்கள்

23.1 மாநில த்தின் புவிசார் ஆள்புலம், மாநிலத்தின் அதிகாரம் மற்றும் பிராந்தியம் தொடர்பான அனைத்து விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றம் அரசியல் அமைப்பில் மாற்றம் எதனையும் முன்மொழியுமிடத்து அத்திருத்தங்கள் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் அனைத்துப் மாநிலங்களினதும் சட்டவாக்க சபைகளிலும் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவும் வேண்டும்.

மேலே விபரிக்கப்பட்டவாறு மத்தியில் ஏதாவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு அத்திருத்தம் ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது மாநிலங்களில் நிறைவேற்றப்படாது விடின் அம் மாநிலத்திற்கு அல்லது மாநிலங்களுக்கு ஏற்புடையதாகாது.

23.2 ஏனைய அரசியலமைப்புத் திருத்தங்கள் பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படின் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்..

24. வடகிழக்குப் மாநில ஆட்சி நடைமுறைக்கான சில முன் மொழிவுகள்.

மேலே குறிப்பிடப்பட்டது போல் தங்கள் மாநிலங்களில் ஆட்சியினைக் கொண்டு நடாத்துவதற்கு அந்தந்த மாநிலங்கள் ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.

1. சட்டவாக்க சபையிலும், மாநில அமைச்சரவையிலும் ஆகக் குறைந்தது 1/3 பங்கு ஆசனம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

2. முதலமைச்சர் தவிர்ந்த ஆகக் கூடுதலாக 14 அமைச்சர்களைக் கொண்ட மாநில அமைச்சரவை. உப அமைச்சர் அல்லது அது போன்ற அமைச்சர்கள் இடம் பெற மாட்டார்.

3. ஐக்கிய நாடுகள் சபையால் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களுக்கு என வகுக்கப்பட்ட நியமங்களுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட மாநில மனித உரிமைகள் ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படுவதுமாகியதும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வலுவாக்கக் கூடியதுமான பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை உள்ளடக்கிய மாநில மனித உரிமைகள் பட்டயம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

4. மக்களின் ஆலோசனைகளுடன் சாதி பாகுபாட்டை இல்லாதொழிப்பதை வலியுறுத்தும் நடவடிக்கைகள் மாநிலத்தின் வழிகாட்டும் கோட்பாடுகள் ஆவணத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

5. ஊழலுக்கெதிரான இந்திய செயற்பாட்டாளர்களால் முன் வைக்கப்பட்ட இந்திய ஜன் லோக்பல் சட்டமூலத்தை மாதிரியாகக் கொண்ட சுயாதீன பிரஜைகள் குறைகேள் அதிகாரி நியமிக்கப்படுவார்.

6. நிலையான அபிவிருத்தியையும் பசுமை வளர்ச்சியையும் உறுதிப்படுத்தக்கூடிய அதிகாரங்களை உடைய சுயாதீன பிராந்திய சுற்றுப் புறச்சூழல் அதிகாரசபை ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்துள்ள புதிய அரசியல் அமைப்பு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PDF Version

Related Posts