தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டின் ஒரு முக்கிய அங்கம் என்பதை இந்த தேர்தல் முடிவு எடுத்துக்காட்டியுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த தேர்தலில் தேசிய ரீதியில் நாங்கள் எமது கடமையை செய்தோம். இந்த முறை தேசிய ரீதியில் பார்த்தால், முதல் இருந்த அரசாங்கம் சிறுபான்மை இனத்தை அச்சுறுத்தி நசுக்கியதன் வெளிப்பாடு தான் இந்த தேர்தலில் சிறுபான்மையினம் அதற்கான பதிலை வெளிப்படுத்தியுள்ளனர்.
நீண்டகாலம் ஒரு ஆட்சி முறை இருந்தால் அது நிலைத்து விடும். அது நல்லது இல்லை. நடைபெற்ற தேர்தலும் ஆட்சி மாற்றமும் அமைதியாக இருக்கின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நல்ல முன்மாதிரியாக வெளியேறியது பாராட்டத்தக்க விடயம்.
அடுத்த அரசாங்கம் எமக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும் என்பது எமது விருப்பம். நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.