தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் : எம்.ஏ.சுமந்திரன்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தாத ஒரு போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 32ஆவது ஆண்டு நினைவு தினம், தாவடியில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் நேற்று (03) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த ஓகஸ்ட் 04ஆம் திகதி, இந்த நாட்டின் உயர் நீதிமன்றத்தால் முக்கியமான தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கோருவது பிரிவினையை என ஒருவர் தொடுத்த வழக்கை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தள்ளுபடி செய்த வேளையில்,சமஷ்டி கோரிக்கை பிரிவினை அல்ல. சமஷ்டிக்கும் ஒற்றையாட்சிக்கும் இடையிலான வேறுபாடு என்ன என்பது தொடர்பில் தெளிவாகக் கூறியிருந்தது.

“ஆனால், அதற்கும் மேலாகச் சென்று, தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தில் மக்கள் என்ற அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை கோருவதன் பிரதி பலனாக அதனை உள்ளகமாக பிரயோசனைப் படுத்துவதற்காக சமஷ்டியை கோருகின்றார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. கனேடிய உயர் நீதிமன்ற தீர்ப்பையும் அதற்கு ஆதாரமாகக் காட்டியுள்ளார்கள். முதல் தடவையாக உயர் நீதிமன்றம் மூன்று சிங்கள நீதியரசர்களை கொண்ட நீதியரசர் குழாம், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. அதன் அடிப்படியில், அவர்கள் சமஷ்டிக் கோரிக்கை சட்டபூர்வமானது என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.

“இந்தத் தீர்ப்பு, தற்போதைய அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்துள்ளது. சமஷ்டி அடிப்படையில் தான் எங்களுக்கு தீர்வு வேண்டும். ஆனால், சமஷ்டி என்பதன் அடிப்படை குணாதிசயங்கள் வர போகும் அரசமைப்பிலே இருந்தாக வேண்டும் என்பதில், கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தை சமஷ்டி என வர்ணிக்கவில்லை. அது சமஷ்டியைப் போன்றது என உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

“இப்போது, அது சமஷ்டி என தீர்க்கமாகக் கூறியுள்ளது. அந்த குணாதிசயங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த குணாதிசயங்களோடு புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இன்னும் சில நாட்களுக்குள் இடைக்கால அறிக்கை வெளிவரும். அப்போது பல சந்தேகிகளுக்கு விளக்கம் தெரியவரும். ஆனால், இறுதியாக வரப்போகும் அரசமைப்புச் சட்டம், மக்களுடைய அனுமதிக்காக அவர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டு தான் ஒரு தீர்மானம் எடுக்கப்படும் என்பதில் எள்ளளவும் விலகவில்லை.

“அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில், இது நல்ல சந்தர்ப்பம் என கூறுகின்றார்கள். சர்வதேசத்திலும் இன்று இருக்கும் ஆதரவு போன்று என்றும் இருந்ததில்லை. ஒரு நாட்டை கூட நாங்கள் குறித்து சொல்ல முடியாது. இவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுடைய நியாயமான அரசியல் அபிலாசைகள் ஓர் அரசமைப்பு ஊடாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒன்றாக இருக்கும் சூழ்நிலை இது.

“இவ்வாறான சூழ்நிலை எப்போதும் எமக்கு இருந்ததில்லை. இது போருக்குப் பின்னதாக உருவாகிய சூழ்நிலை. ஆகவே, சர்வதேச அனுசரணையும் முழுமையாக இருக்கும் நிலையில் இந்த நீண்ட அரசியல் நோக்கை அடைவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எனினும், பல தடைகள் வரும். ஒவ்வொரு தடைகள் வரும்போது விட்டு வந்துவிடுங்கள். இது பயனற்றது என பிதற்றுபவர்களின் சொற்களை கேட்டு மக்களின் இருப்பை விட்டுவிட முடியாது.

“ஆயுதம் எடுத்துப் போராடும் சந்தர்ப்பங்களில் இது நிகழுவது சகஜம். அதனால் ஆயுதம் எடுத்துப் போராடியது தவறு என்று, நான் சொல்லவில்லை. நாங்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என தீர்மானத்தை எடுத்தோம். அந்த சூழ்நிலையில், வேறொரு மாற்று வழி இருக்கவில்லை. ஆதலால், ஆயுதம் ஏந்திப் போராடுவது என தீர்மானித்தோம். எவ்வாறாயினும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தாத ஒரு போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

Related Posts