வடக்கு மக்களின் குரலாக ஒலிப்பதற்கு, தமிழ் மக்கள் எமக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க கோரியுள்ளார்.
யாழில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களுக்கு ஏன் தேவை என்பதனை இங்கு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
எமது நாட்டில் உள்ள முன்னைய அரசாங்கத்தையும், இன்றுள்ள மைத்திரி அரசாங்கத்தையும் நோக்கினால் இரு கும்பல்களிலும் கள்ளர்களும் பொய்யர்களுமே காணப்படுகின்றனர். இந்த விடயம் நாட்டில் உள்ள மக்கள் அனைவரிற்கும் தெரியும்.
இதேவேளை, தமிழர்களின் தலைமை எனக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இவ்வளவு காலமும் எதனையும் செய்யாது, தற்போது தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பத்தில் மக்களுக்கான அபிவிருத்திகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று அங்கு, தமிழ் மக்களுக்கு விரோதமான அனைத்து உடன்படிக்கைகளுக்கும், சட்டங்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு காவடி எடுக்கும் கட்சியாக செயற்படும் கூட்டமைப்பு, இன்று மக்கள் விடுதலை முன்னணியைப் பார்த்து இனவாதிகள் எனக் கூறுகின்றார்கள்.
தெற்கில் மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று வடக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்களுக்குரிய நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்க முடியாமல் தோல்வி கண்டு, தேர்தலுக்கு சம்பந்தமில்லாத அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
வட மாகாண மக்களுக்கு என்று ஒரு குரல் தேவைப்படுகின்றது. மற்றைய ஏனைய கட்சிகள் மக்களுக்கான குரல் கொடுக்க மறுத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், மக்கள் விடுதலை முன்னணியாகிய நாங்கள் இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும், காணாமல் போனோர் பிரச்சினை, காணாமல் போனோர்களின் அலுவலகம் அமைப்பது தொடர்பாக சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்திருக்கின்றோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி மக்களுக்கு குரலை மேலோழுங்கச் செய்வதற்கு, தமிழ் மக்களின் குரலாக மாறுவுதற்கு, தமிழ் மக்கள் விடுதலை முன்னணிக்கு உதவ முன்வர வேண்டும்” என்றார்.