தமிழ் மக்களுக்கு வீடமைக்க நிதியில்லை என்றவர் மஹிந்த, அதனை அவர் ஒப்புக்கொள்வதற்கு தயாரா? – இரா. சம்பந்தன்

sambanthan 1_CIயாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமிழில் பேசி வாக்குக் கேட்க விருக்கும் மஹிந்தா, வன்னியில் 80 சத வீதமான மக்கள் வீடிழந்து இருக்கின்றனர். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று சம்பந்தன் கேட்ட போது அந்தளவுக்கு எங்களிடம் நிதியில்லை என்று சொன்னதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்வாரா என்று பகிரங்கச் சவால் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.

புத்தூரில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

வட மாகாணம் தமிழ் மக்கள் தனிப் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாகாணம். இந்த மாகாணத்தின் அதிகாரம் தமிழ் பேசும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே இருக்க வேண்டும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒருபோதும் இலங்கை அரசால் மீறப்படாது. ஏனெனில் இதன் ஒரு தரப்பாகிய இந்தியா, இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இலங்கை அரசு இந்த விடயத்தில் அவதானமாகவே செயற்படும்.

அபிவிருத்திக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். ஆனால் அபிவிருத்தியின் பெயரால் எங்கள் உரிமையை இழக்க முடியாது. இங்கு தெருக்கள் போடப்படுவதும் பாலங்கள் அமைக்கப்படுவதும் தான் அபிவிருத்தியா? இவை அவர்களின் நலனுக்காகவே போடப் படுகின்றன.

போர் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கிளிநொச்சி மாவட்டத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டது. இதன் பின்னர் ஜனாதிபதியைச் சந்தித்த போது, அந்தப் பகுதியில் 80 சதவீதமானோர் வீடுகள் இல்லாமல் இருப்பதை அவரிடம் தெரிவித்தோம்.

இதற்கு ஜனாதிபதி, அந்த வீடுகள் அமைப்பதற்குரிய நிதி தன்னிடமில்லை என்று பதிலளித்தார். கொடுப்பதற்கு மனமிருந்தால்தானே கொடுப்பார்கள். இதன் பின்னரே இந்தியப் பிரதமரிடம் இதனைத் தெரியப்படுத்தி இந்திய வீட்டுத் திட்டம் இங்கு வழங்கப்பட்டது.

எதிர் காலச் சந்ததி கெளரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் நாங்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்கள் இந்த வட மாகாண சபைத் தேர்தலில் வழங்கும் வாக்கைப் பொறுத்தே அடுத்த ஆண்டில் ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றார்

Related Posts