அபிவிருத்தியில் தமிழ்மக்கள் தொடர்ந்தும் பயணிக்க வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதிப்படவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.
காங்கேச்துறை தொகுதிக்கான ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்கூட்டம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள ஈ.பி.டி.பியின் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றபோதே, அதில் கலந்துகொண்டு குகேந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
இழந்தவற்றை மீட்டு தந்துகொண்டிருக்கும் ஒருவருக்கு எமது ஆதரவை தொடர்ந்தும் கொடுப்பதன் மூலம் தான், மேலும் அதிகமானவற்றை எமது மக்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.
எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி, தான் வரும் அரசியல் பருவகாலத்துக்குமான இந்நாட்டின் ஜனாதிபதியாக வலம்வருவார் என்பதை யாரும் மாற்றிவிட முடியாது.
இருந்தும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவரது வெற்றியை உறுதிபெற செய்வோமானால் கடந்த காலத்தில் நாம் இழந்துபோன வாழ்வாதாரங்கள், அபிவிருத்திகள் தொடக்கம் எதிர்காலத்துக்கு தேவையான அனைத்தையும் உரிமையுடன் கேட்டு பெற்றுக்கொள்ள முடியும்.
வலி – வடக்கில் நாம் மீளக்குடியமர முடியாது என பலரால் கூறப்பட்ட இடங்களில் கூட எமது மக்கள் இன்று குடியேறி வாழமுடிகின்றது என்றால் அது எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் கொண்டுள்ள நடைமுறைக்கு சாத்தியமான அரசியல் நகர்வுகளால்தான் முடிந்துள்ளது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
எமது மக்களை பொறுத்தளவில் இன்று காணும் அனைத்து வசதிகளையும் அமைச்சர் பெற்றுத்தருவதற்கு அடிப்படை காரணமாக இருந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ற உரிமையுடன் ஜனாதிபதியை நாம் அனைவரும் ஆதரித்து வெற்றிகொள்ள செய்ய வேண்டும்.
இன்று எமது பகுதியில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புகள் அதிகளவு வழங்கப்பட்டுள்ளன, இலகுவான போக்குவரத்து வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன, சுதந்திரமாக சுற்றித்திரியும் சூழ்நிலை உருவாக்கி தரப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார்.