Ad Widget

தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்குக! ஜனாதிபதிக்கு சம்பந்தன் வலியுறுத்து!!

“தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.சுமார் 80 லட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் ஜேர்மன் அரசின் உதவியில்கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நிறுவனம் இந்தப் பகுதிக்கு ஒரு வரப்பிரசாதம். இதற்காக ஜேர்மன் நாட்டுக்கு எமது நன்றியைத் தெரிவிக்கின்றோம். இதனைப் பயன்படுத்தி கிளிநொச்சி மாவட்ட மக்கள் உச்ச பயனைப் பெற வேண்டும். இதன் மூலம் எமது சமூகம், நாட்டினை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும்.

உலக அளவில் ஜேர்மனி ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது. தற்போது உலக நாடுகளில் பொருளாதார ரீதியில் சக்தி வாய்ததாக ஜேர்மனி திகழ்கின்றது. இவ்வாறானதொரு முன்னேற்றமே இலங்கைக்கு வேண்டும். போர்ச்சூழலைக் கடந்த நாம் இவ்வாறான மாற்றங்களுக்கு ஏற்ப செயற்படவேண்டும்.

2015 ஆம் ஆண்டு, புதிய அரசு பதவியேற்றதும் மக்கள் மத்தியில் நம்பிக்கை துளிர்த்தது. புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து நாட்டினை சிறந்த பாதைக்கு இட்டுச் செல்கின்றனர். இலங்கையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து உறுதியான அரசாக செயற்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நாட்டின் குறைபாடுதான் என்ன? இந்த நாட்டில் உள்ள குறைபாடு சமத்துவமற்ற அரசமைப்பாகும்.

தற்போது எமது ஜனாதிபதி மூலம் அரசமைப்பு மாற்றியமைக்கப்படுவதற்காக சாதமான சூழல் நிலவி வருகின்றது. தமிழர்களின் குரல்கள் கேட்கப்பட்டு வருகின்றது. நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த நாடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்க உரிமை உண்டு. அவர்கள் இது எனது நாடு எனத் தெரிவிப்பதில் பெருமைப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கான அனைத்து நலன்களும் – உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.

யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விடயம் பற்றி நான் தெரிவிப்பதாவது, மாணவர்கள் சுதந்திரமான, சுயாதீனமான கல்வியைப் பெற வேண்டும். நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து, இந்தப் பல்கலைக்கழத்தில் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். வேறுபாடுகளோ, அச்ச உணர்வுகளோ அவர்களிடம் இருக்கவேண்டியதில்லை.

நாடு தழுவிய ரீதியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கவேண்டும். பாதுகாப்பான விதத்தில் மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இவற்றுக்கான உடனடித் தீர்வைப் பெறுவதுடன், மூடப்பட்ட யாழ்.பல்கலைக்கழகம் மிகவிரைவில் திறக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்” – என்றார்

Related Posts