ஜனாதிபதியானாலும், டலஸ் அழகப்பெருமவானாலும், பஷில் ராஜபக்ஷவானாலும் எங்களை மிரட்ட முடியாது. அரசியல் சாசன ரீதியாக என்ன இருக்கிறதோ அவற்றை நாங்கள் கேட்டுக்கும் போது எவரும் எங்களை மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் கொடிகாமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன்,
´நாங்கள் எவரிடமும் பிச்சை கேட்கவில்லை. நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். பல நூற்றாண்டு காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து வருபவர்கள். எங்களிடமிருந்து உரிமைகளைப் பறிப்பதற்கான உரிமையை அவர்களுக்கு எவரும் வழங்கவில்லை.
இலங்கையில் உருவாக்கப்பட்ட 72ம் ஆண்டு, 78ம் ஆண்டு அரசியல் சாசனங்கள் கூட தமிழ் மக்களின் ஒப்புதலின்றி கொண்டுவரப்பட்டவை. அது கூட எங்களைக் கட்டுப்படுத்தாது. ஆனால் அதனை ஏற்று நாங்கள் நடக்கின்றோம்.
ஆகவே நாங்கள் அடங்கிப் போகின்றோம் என்பதற்காக நீங்கள் எதையும் தர முடியாது என்று கூறமுடியாது. நாங்கள் ஜனநாயக ரீதியாக உள்நாடு, வெளிநாடுகளில் போராட்டங்களை நடத்தி எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வோம்.´ என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த பிரசாரக் கூட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் கலந்து கொண்டிருந்தார்.
அங்கு உரையாற்றிய அவர்,
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இலங்கை வந்தது தேங்காய் திருவுவதற்கோ அல்லது கோமாளி மேர்வின் சில்வாவை மணம் முடிக்கவோ அல்ல. அவர் இங்கே வருகை தந்ததற்குக் காரணம் தமிழ் மக்களின் போராட்டங்கள்.
அவரை இங்கு கொண்டுவருவதற்கு நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஒன்றரை இலட்சம் மக்களை அதற்காகக் காவு கொடுத்திருக்கிறோம்.
அதற்கமையத் தான் தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலில் இருக்கிறது. அது தொடர்ச்சியாக இருக்கும் என்றில்லை.
எனவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது உரிமைகளை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்´ என குறிப்பிட்டார்.