தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி பொறுமை காக்கின்றோம்: சித்தார்த்தன்

காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்களில் அரசு மெத்தனமாக இருந்தாலும், தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி நாங்கள் பொறுமை காக்கின்றோம் என புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா திருநாவற்குளத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் எஸ்.காண்டீபனின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இடைக்கால அறிக்கையை பற்றி இப்போது பேசப்படுகின்றது அது இறுதி அறிக்கை அல்ல! அது முழுமையடையும் போதுதான் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வதா? நிராகரிப்பதா? என்பதனை முடிவெடுக்க முடியும்

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜனாதிபதியாக வருவதற்கு 80 வீதமான தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். அரசினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. வரவுசெலவு திட்டத்திற்கு வாக்களிப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கபட்ட நிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுடன் வன்னி மக்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருடாக வரும் அபிவிருத்தியை இழந்துள்ளார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அந்தந்த மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதியானது மாவட்ட அபிவிருத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது அனைவருக்கும் தெரியும் இதனைத் திரித்து சிலர் பொய்யாக பரப்புரை செய்கின்றனர். சுரேஸ் பிரேமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அரசிடமிருந்து பிரத்தியேமாக நிதியை பெற்று அபிவிருத்தி வேலைகளை செய்திருந்தார்’ என கூறினார்.

Related Posts