தமிழ் மக்களின் உரிமைக்காவும் நலன்களுக்காகவும் தனது இறுதி மூச்சு வரை, அரசியல் ரீதியில் போராடியவர் அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் குருநகரில் அமைந்துள்ள அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் உருவச்சிலை நினைவிடத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற, அவரது 113 ஆவது பிறந்ததின நிகழ்வில் கலந்துகொண்டு, மலர் மாலை அணிவித்து உரை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நலன்களுக்காகவும் இறுதிவரை உழைத்த மாபெரும் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 113 ஆவது பிறந்த தினத்தில் அவரை நினைவு கூறுவது எம் அனைவரதும் கடமையாகும்.
தமிழர்களுக்கென தனியான ஓர் அரசியல்கட்சி இல்லாத நேரத்தில் ஜீ.ஜீ.பொன்னம்பலம், 1944ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்தார்.
சேர் பொன்னம்பலம், சேர் அருணாசலம் முதலான தலைவர்களின் பின், இருந்த வெற்றிடத்தை நிரப்பியவர் ஜீ.ஜீ.
தமிழர்களுக்காக ஓர் தன்னிகரில்லா தலைவனாக திகழ்ந்தவர் அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மருமகனான பேராசிரியர் வில்சன் அவர்கள் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.