இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்கா முன்னெடுக்கவுள்ள நடவடிக்கையினை ஏற்கமுடியாது என்றும் அவ்வாறான முயற்சியினை நிராகரிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கு கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 09ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தென்னாபிரிக்காவிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டிய சிவாஜிலிங்கம், இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என்றும் இனப்படுகொலை தற்போதும் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டியதுடன் ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது தென்னாபிரிக்க அரசு இலங்கை அரசாங்கத்துக்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டதுடன் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டுக்கூறினார்.
தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ளாத தென்னாபிரிக்க அரசு நடுவு நிலைமை வகிப்பதற்கு தகுதியற்றது என்றும் தெரிவித்தார். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தென்னாபிரிக்காவின் நடுவுநிலைமையுடன் இனப்பிரச்சினைத் தீர்வினை எட்ட மேற்கொள்ளும் நடவடிக்கையினையும் முற்றாக நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை இறுதிப் போரின் போது இடம்பெற்ற சம்பவங்களுக்காக மன்னிப்புக் கோருதல் என்ற விடயத்தின் மூலம் இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறுதலில் இருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்ளுதல் நடவடிக்கைக்கு தென்னாபிரிக்கா ஆலோசனை வழங்கிவருவதாக வெளியாகியுள்ள தகவல்களையும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்தி