தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாகச் செயற்படுகிறார் கஜேந்திரகுமார் – மாவை. சேனாதிராஜா குற்றச்சாட்டு

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தால் எங்கள் இனம் அழிந்து போகும் எனத் தெரிந்தும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரவேண்டும் என்று கஜேந்திரகுமார் பிரசாரம் செய்கின்றார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ். தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எங்கள் மக்களுடைய உணர்வுகளை, புண்படுத்தும் வகையில் ராஜபக்ஷ எடுத்து வந்த நடவடிக்கைகளைத் தெரிந்தும் நேர் விரோதமான செயற்பாடுகளை கஜேந்திரகுமார் போன்றவர்கள் முன்னெடுத்து வந்தார்கள்.

அத்தோடு இன்னொரு விடயத்தை இரகசியமாகப் பேசிக்கொண்டார்கள்.

கொடுமைகளைச் செய்வதற்கு ஆட்சியில் ராஜபக்ஷ இருந்தால்தான் சர்வதேச நாடுகள் தலையிடும் என்றதொரு மந்திரத்தையும் கஜேந்திரகுமார் உள்ளிட்டவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் எமது மக்கள் போரிலும், அதற்கு பின்னரும் மிகப்பெரிய பேரழிவுக்குள்ளாக்கிய மஹிந்த ராஷபக்ஷவை ஒவ்வொரு தேர்தல்களிலும் தோற்கடித்திருக்கிறார்கள் என்று மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சித் தேர்தல், பொதுத்தேர்தல் என்பவற்றில் தோற்கடித்திருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இருக்க ராஜபக்ஷ திட்டந்தீட்டினார்.

எமது நிலங்களை அபகரித்து, தமிழ் நிலங்களை இல்லாமல் செய்து அவர்களது அடையங்களை அழித்து விடுவதற்கு ராஜபக்ஷவிற்கு எட்டு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்காது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு கஜேந்திரகுமாரும் அவரது கட்சியினரும் அவருக்குப் பின்னால் நிற்பவர்களும் பின்னணியாக இருந்தார்கள் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை. சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Posts