தமிழ் மக்களால் தெரிவான ஜனாதிபதி மக்களை வீதியில் விட்டுவிட்டார் – விஜயகலா

தமிழ் மக்களால் தெரிவான ஜனாதிபதி எமது மக்களை வீதியில் விட்டுவிட்டார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தில் 4 வருடங்களை வீணடித்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சியில் 4,500 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் உரையாற்றுகையில், “கடந்த 4 வருடங்களாக ஆட்சியில் இருந்தும் எங்களால் இந்த சமுர்த்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆனால் இன்று அந்த வாய்ப்பு கிடைத்திருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எங்களுக்கு ஆதரவினைத் தந்து இந்த அரசாங்கம் அமைவதற்கு வாய்ப்பளித்தனர். நான்கு வருடங்களாக நல்லாட்சி அரசாங்கம் என்று நம்பியிருந்தோம் ஆனால் இந்த 4 வருடங்களையும் நாங்கள் வீணடித்துவிட்டோம். எங்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியும் இன்று எங்களை வீதியில் விட்டுச் சென்றுள்ளார்.

இதனிடையே, அமைச்சர் தயாகமகேவிடம் இன்னும் விடுபட்ட மக்களுக்கான உதவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் தொடர்பாகவும் கதைத்துள்ளோம். அத்தோடு பட்டதாரிகள் நியமனம் தொடர்பாகவும் கதைத்துள்ளோம். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் தருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் இதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

Related Posts