‘தமிழ் பேசும் மக்களின் இருப்பை உறுதிப்படுத்த வாக்களிப்போம்’ – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Jaffna_Universityஇலங்கைத் தீவுக்குள் அச்சுறுத்தல் அற்ற வாழ்க்கையை ஒவ்வொரு சிறுபான்மையினமும் அனுபவிக்கின்றதா என்பதனை நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தல்தான் உலகிற்கு உணர்த்தப் போகின்றதாக என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையினை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழ் மக்களாகிய நாம் முழுமையான வாக்குப் பதிவுகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும். எனவே காலத்தையும் சூழ்நிலையையும் தேவையினையும் உணர்ந்து தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான இறைமையினை நிலைநாட்டக்கூடிய தமிழ் தேசியத்திற்காய் போராடுவோருக்கே உங்களது வாக்குகளை வழங்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் உரிமையுடன் உங்களிடம் வேண்டி நிற்கின்றோம்.

அந்த வகையில், இலங்கை ஆங்கிலேயரின் பிடியிலிருந்து விடுபட்ட காலத்திலிருந்தே சிறுபான்மையினங்கள் மீதான ஆக்கிரமிப்புக்களும் அடக்கு முறைகளும் இந்த நாட்டில் முளைவிடத் தொடங்கி காலத்தில் இருந்து மேறள்கொள்ளப்பட்ட அகிம்சைப் போராட்டங்கள் பலனற்றுப்போய் ஆயுதப் போராட்டமும் வலுவிழந்து இன்று மீண்டும் சாத்வீக போராட்டத்திற்காக தமிழ் பேசும் சிறுபான்மையினம் தயாராகின்றது.

இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் இணைந்த தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கு மண்ணை தன் கோரப்பற்களால் கௌவிக்கொண்டிருந்த போர் முடிவிற்கு வந்து நான்கு வருடங்கள் கடந்து விட்டநிலையிலும் இனப்பிரச்சனைக்குரிய தீர்க்கமான முடிவுகளோ முன்மொழிவுகளோ ஆளும் தரப்பிடமிருந்து இதுவரை கிடைக்காதமையே வேதனைக்குரிய விடயம்.

அபிவிருத்தி என்ற பெயரில் தென்னிலங்கையை விட வடக்கு கிழக்கை சீர்படுத்திவிட்டு இதுதான் தீர்வு என்று அழுக்கி பிடிப்பதானது சிறுபிள்ளைத்தனமான முடிவாகும். இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தியைப் பற்றி பலரும் பலவாறாக பேசுகின்றார்கள்.

அபிவிருத்தியால் மக்களின் மனங்களை மாற்றலாம் என்று ஆளும் தரப்பு சிந்திக்கின்றது. ஆனாலும் ஒன்றை மட்டும் உணர வேண்டும். பழைய புத்தகத்திற்கு புது உறைகளைப் போட்டு விட்டு அதனை கறையான் புற்றுக்கு அருகில் வைப்பதை போன்றதே இலங்கை அரசின் அபிவிருத்தி நோக்கம்.

அதாவது இலங்கையில் இனங்களுக்கு இடையிலான பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும் அனைத்து இனங்களும் சமத்துவம் சகோதரத்துவம் என்னும் அடிப்படையில் ஒற்றுமையுடன் இணைந்து வாழ வேண்டும் என்று அடிக்கொரு அறிக்கை விடுகின்ற அதே அரசாங்கம் தான் இனவாத நெருப்பை கக்கிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது சலுகைகளோ சன்மானங்களோ இல்லை. மரபு வழியாக தம் உயிரோடும் உடலோடும் பிரண்டு உருண்ட சொந்த மண்ணில் எந்தவித அச்சுறுத்தல்களும் இன்றி நிம்மதியாகவும் தன்னிறைவாகவும் வாழ்வதற்கான உரிமையினையே காலம் காலமாக வேண்டி நிற்கின்றனர்.

இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ் மக்களின் மனங்களை வெல்லாம் என்று இலங்கையரசு தொடந்தும் எதிர்பார்பதே கவலைக்குரிய விடயமாகும். இதனடிப்படையிலேயே வடக்கோடு இணைந்திருந்த கிழக்கு மாகாணத்தை வலிந்து பிரித்து விட்டு மூவினங்களும் சமமாக வாழ்கின்ற அம்மாகாணத்தில் எதுவித சலனமும் இன்றி தேர்தலை நடத்தி இரண்டு முறையும் மாகாண சபையை பிடித்து பொம்மையாட்சியை இலங்கை அரசு நடத்துகின்றது.

ஆனால் வடக்கில் மிகப் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்வதால் தம் வெற்றி குறித்த சந்தேகத்தில் வட மாகாணத் தேர்தலை இதுவரை காலமும் இழுத்தடித்து வந்துள்ள இந்நிலையில் சர்வதேசத்தின் நெருக்குதல்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் இந்ந வட மாகாண சபைக்கான தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது.

இதற்காக தமிழ் பேசும் மக்களது வாக்குகளை சிதறடிப்பதற்காக எதுவித அரசியல் வரலாற்று அறிவுமற்ற நபர்களை பல்வேறு சுயேட்சை குழுக்களாக களமிறக்கி அற்ப சொற்ப சலுகைகளையும் வாக்குறுதிகளையும் தொடர்ந்தும் வழங்கி வருவது தமிழ் மக்களை மேலும் மேலும் ஏமாற்றும் செயல்

அன்புக்குரிய எமது மக்களே ! இன்று முழு உலகமே இந்த தேர்தலை முழுமனதுடன் எதிர்பார்க்கின்றது. இலங்கைத் தீவுக்குள் அச்சுறுத்தல் அற்ற வாழ்க்கையை ஒவ்வொரு சிறுபான்மையினமும் அனுபவிக்கின்றதா? என்பதனை இந்தமுறைத் தேர்தல்தான் உலகிற்கு உணர்த்தப்போகின்றது. தமிழ் மக்களாகிய நாம் முழுமையான வாக்குப்பதிவுகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

எனவே காலத்தையும் சூழ்நிலையையும் தேவையினையும் உணர்ந்து தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான இறைமையினை நிலைநாட்டக்கூடிய தமிழ்தேசியத்திற்காய் போராடுவோருக்கே உங்களது வாக்குகளை வழங்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் உரிமையுடன் உங்களிடம் வேண்டி நிற்கின்றோம் என மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

uni-1
uni-2

Related Posts