தமிழ் பேசும் அரசே நிறுவப்படவேண்டும்; சி.வி. விக்னேஸ்வரன்

vicknewaran-tnaவடமாகாணத்தில் தமிழ் பேசும் அரசு நிறுவப்பட வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் – என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

தேர்தல் காலத்தில் மட்டும் தேனாகப் பேசி, தேர்ந்தெடுக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய அரச தரப்பினர் முன்வருன்றார்கள். அதன் பின் எங்களை மறந்து விடுகின்றார்கள். வாக்குரிமை என்பது அவர்களுக்கு ஒருவித பண்டமாற்றாகி விட்டது.

நாங்கள் இதைத் தருகின்றோம். நீங்கள் அதைத் தாருங்கள் என்கிறார்கள். ஆனால் தருவது அவர்களா? அது ஒரு போதும் இல்லை. இந்த நாட்டு மக்களை எதிரிகளாகக் கருதி கொடும் போரை நடத்தி, எமது மக்களின் வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்கி, எமது மக்களின் உயிர்களை கொய்தெறிந்து, உடல்களைச் சின்னா பின்னமாக்கி விட்டு தற்பொழுது இராணுவத்தை வைத்து எம்மை அடக்கு முறைக்குள் அகப்படுத்தியிருக்கும் அரசின் தூதர்களே இத்தகைய பண்டமாற்றில் ஈடுபட்டுள்ளார்கள்.

உங்களுக்குத் தெருக்கள் தந்தோம், வீதிகள் தந்தோம், இன்னும் தருவோம் உங்கள் வாக்குகளை எமக்குத் தாருங்கள் என்கின்றார்கள்.

தெருக்கள் போட்டார்களே, அதுவும் அவசர அவசரமாகப் போட்டார்களே, அது யார் பணத்தில்? பாதிக்கப்பட்ட எமது மக்களின் அல்லல்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அண்டை நாடுகள் எமக்கனுப்பிய பணத்தைக் கொண்டுதான் தெருக்கள் அமைக்கப்பட்டன.

இதில் வேலை வாய்ப்பு யாருக்குக் கிடைத்தது? எமது மக்களுக்கா அல்லது தெற்கில் இருந்து வந்த சிங்கள மக்களுக்காக? 1956 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை இந்தப் பக்கம் தலை வைத்தும் பார்க்காத ஆட்சியாளர்கள் ஏன் தெருக்களைப் போட்டார்கள்?

வீடிழந்து, வேலையிழந்து, உற்றார் உறவினரைப் பறிகொடுத்து தமது பாரம்பரிய காணிகளுக்குள் செல்ல முடியாது இராணுவக் கெடுபிடிக்குள் அல்லலுறும் எமது மக்களுக்காகவா இந்த தெருக்கள் அமைக்கப்பட்டன?

இராணும் வடமாகாணத்தின் எந்தப் பகுதியையும் உடனேயே சென்றடைய வேண்டும்? தமிழ் பேசும் மக்களை அடக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காப்பெற் வீதிகளை காட்சிப் பொருளாக்கினார்கள். அது மட்டுமல்ல,வடமாகாண விவசாயி வியர்வை சிந்திப் பெறும் விளைச்சல்களை எல்லாம் நேரடியாக விவசாயிகளிடம் இந்த வீதி வழி சென்று குறைந்த பணம் கொடுத்து வாங்கிப் போய் கூடிய விலையில் தெற்கில் விற்கவும் தான் அவை அமைக்கப்பட்டன.

எமது தமிழ் பேசும் அமைச்சர்களை தன்னிடம் வைத்துக் கொண்டே எமக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எம்மை கொண்டுவித்தே எமக்கு குழி பறிக்க பெரும்பான்மை இன அரசு பின் நின்றதில்லை.

எனவே நாம் எமக்கென ஒரு அரசை நிறுவி எம்மவரை இணைத்து முன்னேறுவதே காலத்தின் தேவையாக இருக்கின்றது. எமது வடமாகாணத்துக்கு தமிழ் பேசும் எம்மால் அரசு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் – என்றார்.

தொடர்புடைய செய்தி

யாழ்ப்பாணத்தில் த.தே.கூவின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்

Related Posts