வடக்கு கிழக்கில் வேலையற்ற நிலையில் பல இளைஞர்கள் வாழ்ந்துவரும் நிலையில், அங்குள்ள அலுவலகங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணிக்கமர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, கிளிநொச்சியில் உள்ள மத்திய அரசின் திணைக்களங்களில் நிரந்தர அலுவலக உதவியாளர்களாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது, அங்குள்ள வேலையற்ற இளைஞர்களை மட்டுமன்றி, குறித்த அலுவலகங்களில் பல வருட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி, இதுவரை காலமும் நிரந்தர நியமனம் கிடைக்காதவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் குறைந்த தகைமைகளுடனான இப் பணிக்கு பொருத்தமானவர்களை அந்தந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகளே தெரிவுசெய்ய வேண்டும். எனினும் அரசியல் செல்வாக்கின் காரணமாக இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நியமனம் பெற்று வருபவர்கள் பின்னர் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு நியமனம் பெற்றுச் செல்லும்போது, இப்பிரதேசங்களில் காணப்படும் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் காணப்படும் சூழல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.