தமிழ் பிரதிநிதி பொய்கூறும் போது இராணுவம் பொய்கூறுவது பெரிய விடயமல்ல – ஹர்மன் குமார

வடக்கில் ஒரு சிறு துண்டு நிலத்தையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கவில்லையெனவும், இராணுவம் நிலைகொண்டுள்ள காணிகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகள் என இராணுவப் பேச்சாளர், தென்னிலங்கை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஜெனீவா சென்று பொய் கூறும் போது, அந்த இராணுவ ஊடக பேச்சாளர் பொய் கூறியது பெரிய விடயமில்லை’ என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹர்மன் குமார தெரிவித்தார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல, யாழிலுள்ள விருந்தினர் விடுதியில், வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மாத்திரமல்ல தற்போதைய நல்லாட்சி எனச் சொல்லப்படும் ஆட்சிக்காலத்திலும் எமது நிலங்களை விடுவிப்பதற்காகவும், கடல் வளத்துக்காகவும் போரடவேண்டிய நிலையிலுள்ளோம்

அநீதிக்காக போராடிய நாட்டிலுள்ள அனைத்து மக்களும் முன்னைய ஆட்சிக்காலத்தில் 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர். அவ்வாறிருந்தும், அந்த ஆட்சிக் காலத்தில் நிலத்துக்காவும், கடல் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டமைக்கும் எதிராக போராட்டங்களை முன்னெடுத்தோம்.

கடந்த ஆண்டு ஜூலை 15ஆம் திகதி எமது அமைப்பினால் யாழிலே ஒழுக்கங்கமைக்கப்பட்ட போராட்டம், காட்டிக் கொடுப்புக்களால் முடக்கப்பட்டது. சுதந்திரமான சூழலில் இருந்து நாங்கள் போராடவரவில்லை. அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இருந்தே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம்.

கடந்த காலங்களில் நாங்கள் ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்தால் எமக்கு பின்னால் பாதுகாப்பு படையினர் அலைந்து திரிவார்கள்.

வலிகாமம் வடக்கில் இன்னமும் 4 ஆயிரம் மக்களே மீளக்குடியேற்றப்பட வேண்டும் என மீள்குடியேற்ற அமைச்சர், பெரிய பொய் ஒன்றை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தோற்கடிக்கப்பட்டதும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களால் தான் தோற்கடிக்கப்பட்டேன் எனக் கூறினார். அதேவேளை, தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் தனக்கு வாக்களித்து இருக்காவிடின் தான் தற்போது ஆறு அடி மண்ணுக்குள் புதையுண்டு போயிருப்பேன் எனக்கூறியிருந்தார்.

எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்ந்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts