தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் வடக்கில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம்!

வரும் ஏப்ரல் 25 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சமூக ஊடகங்களில் அறிமுகப்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களைப் போன்று இம்முறையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கீழ் அதன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் இம்முறையும் களமிறங்குகின்றனர்.

அவர்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர்களாக தம்மை வெளிப்படுத்தி வந்தவர்களும் கட்சியின் பரப்புரைக்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுமான சட்டத்தரணிகள் கனகரட்ணம் சுகாஷ், நடராஜர் காண்டீபன் ஆகியோரும் முதன்முறையாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்குகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு றோயல் கல்லூரின் முன்னாள் பிரதி அதிபர் மார்டீன் கணபதிப்பிள்ளை யாழ்ப்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அந்தக் கட்சியின் சார்பில் களமிறக்கப்படுகிறார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மகளிர் பிரிவு தலைவியும் நலலூர் பிரதேச சபை உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகரன் முதன்முறையாக பொதுத் தேர்தலில் களமிறக்கப்படுகிறார்.

இவர்களுடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக ஒருவர் களமிறக்கப்படவுள்ளார் என்று கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய இரண்டு வேட்பாளர்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

அத்துடன், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சிவ. கஜேந்திரகுமார், எஸ்.தவபாலன், க.அழகேந்திரன், அரச கால்நடை வைத்தியர் செ.திலகநாதன், லயன் த.தழிழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Related Posts