தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிகிச்சையின் பின்னர் இன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு திரும்பியுள்ள நிலையில்,சனாதிபதித்தேர்தல் தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழ்தேசியக்கூட்டமைப்பு கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக தெரியவருகிறது.
இரண்டு வேட்பாளர்களும் வடக்கில் இருந்து இராணுவத்தினை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பிலான அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்படுகின்றது.
கூட்டமைப்பு இலங்கையின் அரசியல்கட்சியாக முடிவெடுக்குமா அல்லது தமிழினத்தின் தேசிய க்கட்சியாக முடிவெடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் அரசியலமைப்பின் 18ம் திருத்தத்திற்கெதிராகவும் நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராகவும் களமிறங்கியுள்ள மைத்திரி பால சிறிசேனவுக்கு வாக்களிப்பதா அல்லது தனது 3வது தவணையிலும் நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கு ஆணைகோரி நிற்கும் மகிந்தவுக்கு வாக்களிப்பதா என மக்களுக்கு தமது நிலைப்பாட்டினை தெரிவிப்பதில் இருதலைக்கொள்ளி எறும்பாகவே கூட்டமைப்பு இருப்பதாகவும். மகிந்தவுக்கு எதிரான நிலைப்பாட்டினையும் அதேவேளை மைத்திரிக்கு மென்மையான எதிர்ப்பினையும் இவர்களது முடிவு கூறும் என எதிர்வு கூறப்படுகிறது.
அதேவேளை தமிழர்களுக்கு நலன் குறித்து இரு முக்கிய வேட்பாளர்களும் புறக்கணித்துள்ள நிலையில் நாட்டின் நலன் கருதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தார்மீக ஆதரவினை வழங்க கூட்டமைப்பு முன்வரலாம் என்றும் கூறப்படுகின்றது