பொதுமக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் படையினரை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும், வடக்கில் மக்களுடைய நிலங்களில் ஆக்கிரமித்திருக்கும் படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று கிளிநொச்சி நகரில் நடத்தியிருந்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இன்று காலை 11மணியளவில் மாவட்டச் செயலகத்தின் முன்பாக கூடிய மக்கள் தமது நிலங்களில் ஆக்கிரமித்துள்ள படையினர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என பதாகைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பியவாறு உணர்ச்சிபூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக குறித்த போராட்டத்தில் மக்களை கலந்துகொள்ளவிடாது தடுப்பதற்குப் படையினர் கடும் பிரயத்தனம் எடுத்திருந்தனர். எனினும் மக்கள் முழுமையாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது. இதில் காணாமல்போனோர் மற்றும் சிறைகளிலுள்ளோரின் உறவினரும் கலந்து கொண்டு தங்கள் உறவினர்களை மீட்டுத்தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் இந்தப்போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மனோ கணேசன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, வினோ, மற்றும் சி.சிறிதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் சார்பில் அதன் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் முடிவில் ஜ.நாவுக்கான வதிவிடப்பிரதி நிதியிடமும், மாவட்டச் செயலரிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன எமது உறவுகளை மீட்க சர்வதேசமே மனமிரங்கு!- கிளிநொச்சியில் உறவுகளைப் பறிகொடுத்த தயார்மார் கதறல்
சர்வதேசமே இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போன எமது பிள்ளைகளை மீட்டுத்தர நடடிவடிக்கை எடு என கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உறவுகளை இழந்த தாய்மார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தின் போதே அவர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
காணாமல் போனவர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு கண்ணீர் மல்க நெஞ்சை உருக்கும் வகையில் அவர்கள் ஒன்றாக சர்வதேசத்திடம் நீதி கோரினார்கள்.
இராணுவத்தினரால் கடத்தப்பட்டும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் காணாமல் போன தமது உறவுளை மீட்டுத்தரவும் தமிழர்களுக்கான நீதியை வழங்கவும் சர்வதேச தலையிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.