தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேரும் எண்ணம் எமக்கில்லை எனவும் ஈ.பி.டி.பி யை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பு என்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற தொண்டர் ஊழியர்களின் போராட்டத்தை நேற்று நிறைவு செய்து வைத்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முகம்காட்ட ஈ.பி.டி.பி விரும்புகிறது என்று தெரிவித்திருந்தார். அவ்வாறு கூட்டமைப்புடன் சேரும் எண்ணம் எமக்கில்லை. எமது கட்சியை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பு. ஆனால் அவர்களால் எமது கட்சியினை ஒன்றும் செய்ய முடியவில்லை.
நான் பார்த்த வரையில் மூன்று கூட்டமைப்பு இருக்கின்றன. ஆரம்பத்தில் மாவை சேனாதிராசா தலைமையில் ஒரு கூட்டமைப்பு, பின்னர் இரண்டாவது வரதராஜப்பெருமாள் – சுரேஷ் பிரேமச்சந்திரன் இணைந்த கூட்டமைப்பு, மூன்றாவது ஈ.பி.டி.பி யை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு.
கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் செய்து வரும் செயற்பாடுகள் தொடர்பில் ஓர் ஊடகம் விமர்சித்து வருகின்றது. அந்த நிறுவனத்தினூடாக நிதி நிறுவனம் நடத்திய போது அதில் நிதிகளை முதலிட்ட பலர் தற்கொலை செய்துள்ளார்கள்.
இப்படிப்பட்டவர்களின் விமர்சனங்கள் எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி