பாலு மகேந்திரா, பாலச்சந்தர் உள்ளிட்ட முன்னணி தமிழ் திரைப்பட கலைஞர்கள் 2014ல் விண்ணுலகம் சென்றுள்ளனர்.
அதில் பெரும்பாலானோர் படைப்புகள் காலம் கடந்தும் சாகா வரம் பெற்றவை. அந்த இமயங்களின் பெயர்களை அவர்களின் படைப்புகள் எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.
அந்த வகையில் இறந்தும் சாகாவரம் பெற்றவர்கள்தான் இந்த கலைஞர்கள். ஆம்.. கலைஞர்கள் மறையலாம், ஆனால் அவர்களின் கலை என்றுமே மறவாதது.
ஜனவரி 6ம்தேதி நடிகர் உதயகிரண் தனது 33 வயது வயதில் தற்கொலை செய்து கொண்டார். பொய், பெண் சிங்கம், சித்திரம், வம்பு சண்டை போன்ற படங்களில் இவர் நடித்தார்.
பிப்ரவரி 14ம்தேதி, ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும், தடம் பதித்த பாலுமகேந்திரா அவரது 74வது வயதில் மரணமடைந்தார். ஆனால் மூன்றாம் பிறை, வீடு போன்றவை என்றைக்கும் பாலுமகேந்திராவை நினைவுபடுத்தும் சாகா வரம் பெற்ற கலை பொக்கிஷங்களாக நிலைத்துள்ளது.
ஜூன் 12ம்தேதி காமெடி நடிகரான கொடுக்காப்புளி செல்வராஜ் அவரது 56வது வயதில் மறைந்தார்.
ஜூன் 13ம்தேதி, தூள் படத்தில் சொர்ணாக்கா கேரக்டரில், தூள் கிளப்பிய தெலுங்கானா சகுலந்தலா மறைந்தார்.
ஜூன் 22ல் 120 படங்களுக்கு மேல் இயக்கி சாதனை படைத்தவரும், 75 படங்களுக்கு மேல் தயாரித்தவருமான இராம.நாராயணன், அவரது 66வது வயதில் இறந்தார். இவர் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
ஜூலை 20ம்தேதி, காதல் படத்து வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த தண்டபானி அவரது 71வது வயதில் இறந்தார். பெரும் வெற்றி பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட தமிழ், தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
ஆகஸ்ட் 7ம் தேதி, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிகமுகமான சுருளி மனோகர் உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 16ம்தேதி, இயக்குநர் பாலச்சந்தரின் மகன் தயாரிப்பாளர் கைலாசம் இறந்தார்.
அக்டோபர் 24ம்தேதி, லட்சிய நடிகர் என்று புகழப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவரது 86வது வயதில் இறந்தார்.
நவம்பர் 18ம்தேதி, இயக்குநர் ருத்ரய்யா உயிரிழந்தார். அவள் அப்படித்தான், கிராமத்து அத்தியாயம் போன்ற படங்கள் மூலம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குநராக போற்றப்படுபவர் இவராகும்.
டிசம்பர் 23ம்தேதி இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் உயிரிழந்தார்.