யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றதால் யாழ்.பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றவேளையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழமைபோன்று குறித்த நிகழ்வில் தமிழ்கலாசார முறைப்படி மேளதாள வாத்தியங்களோடு மாணவர்களின் வரவேற்கு நிகழ்வு இடம்பெறுவதாகவும் இம்முறை கண்டிய நடனமும் திடீரென அனுமதி பெறப்படாமல் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கண்டிய நடனமே இம் மோதல் நிலைமைக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.கண்டிய நடனத்தின் கலைஞர்கள் இராணுவத்தினரின் ஆதரவுடன் வெளியில் இருந்து ஒழுங்குபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை
இதனால் குறித்த நிகழ்வும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக வளாகம் யுத்தக்களம் போல் காட்சியளிப்பதாகவும் தமிழ், சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கம்பி மற்றும் பொல்லுகளுடன் நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது பல மாணவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
தற்போது மோதல் நிலைமை மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும் கலகமடக்கும் பொலிஸார் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விடுதிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுதியில் உள்ள மாணவர்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானபீடம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின்படி விஞ்ஞான பீட விரிவுரையாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது
இந்நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்று செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியளார்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து பலவந்தமாக வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி படங்கள் : நிதர்சன் , சாலின்)