தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் உறவுப்பாலத்தை வளர்ப்பதற்காக எனது தந்தை பணியாற்றியதை போல, தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை பேணும் வகையில் செயற்படுவேன் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா, வியாழக்கிழமை (24) நடைபெற்ற போது, அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
கல்வியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘எனது பிரதேசமான குளியாப்பிட்டியவில் அப்புக்குட்டி என்ற தமிழர், கடையொன்றை நடத்தி வந்தார். 1983ஆம் ஆண்டு கலவரத்தின் போது, அவர் தனது கடையை எனது அப்பாவின் பெயருக்கு மாற்றிவிட்டு சென்றுவிட்டார். கலவரம் முடிவடைந்த பின்னர், எனது அப்பா, அந்த அப்புக்குட்டியை அழைத்து, அந்தக் கடையைத் திரும்ப அவருக்கு எழுதிக் கொடுத்து, தமிழ் மக்களுடன் சிறந்த உறவைப் பேணியிருந்தார்.
இந்தக் கல்லூரியின் அதிபர், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரிடம், இந்தக் கல்லூரிக்கு என்ன வேண்டும் என்று நான் கேட்டதற்கு, பழைய கட்டடங்கள் புனரமைக்க வேண்டும், இடவசதிகள் இல்லை, போதுமான மலசலகூட வசதிகள் இல்லை என்று ஒருமித்துக் கூறினர். அந்தவகையில் கல்லூரிக்கு 3 மாடிக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு 10 மில்லியன் ரூபாயையும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த 2 மில்லியன் ரூபாயையும் ஒதுக்க தீர்மானித்துள்ளேன்.
இந்தக் கல்லூரி, பல சாதனைகளை செய்துள்ளது. உயர்தரத்தில் கணிதப் பிரிவில் இலங்கையில் முதலிடம் பெற்றதுடன், பல மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது. பிரதம நீதியரசர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஒருவர் ஆகியோர் இங்கிருந்து உருவாகியுள்ளார்கள்.
அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பது கல்வி அமைச்சின் கொள்கை. அதனடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், அனைவரும் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இலங்கையின் எதிர்காலம் கல்வியின் தங்கியுள்ளது. அதனை வளர்க்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
வடக்கு, கிழக்கை சேர்ந்த இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக தற்போதய அரசாங்கம் ஆக்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’ என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.