தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்த

தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் அதனை தமிழ் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை அதிபர் கே. பாஸ்கரன் தலமையில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதல் இசையமைக்கப்பட்ட பாடசாலை இறுவட்டு வெளியீடு பாடசாலை சுகாதாரக் கழகத்தை ஸ்தாபித்தல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் நன்கு சிந்தித்து உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

தான் அதிகாரத்தில் இருப்பவர் என்பதற்காக திடீரென முடிவெடுத்து அதிகாரத்தைப் பிரயோகிக்க முடியாது.
எல்லாத் தரப்புப் பின்னணிகளையும் அலசி ஆராய்ந்து பார்த்தே முடிவெடுக்க வேண்டும். அதுதான் தலைமைத்துவத்துக்கு அழகு சேர்க்கும். இன்னொரு விடயத்தையும் இந்த இடத்தில் நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

தமிழ் சமூகத்தவர்கள் நன்கு கல்வியில் முன்னேற வேண்டும். படிப்பறிவு இல்லாமல் போனால் எதுவும் செய்ய முடியாது. முஸ்லிம் சமூகத்தவர்கள் வர்த்தகத்துறையில் முன்னேற முடியும். சிங்கள சமூகம் பல்வேறு தோட்டந்துரவுகளையும் தொழிற்துறைகளையும் செய்ய முடியும்.

ஆனால் தமிழ் சமூகத்திற்கு எதுவுமில்லை. அதேவளை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இன்னமும் அதிகமாக கல்வியில் முன்னேற வேண்டும்.

ஏனென்றால் எமது பொலிஸ் நிலையத்திற்கு வரும் எத்தனையோ பிரச்சினைகளில் பெண்கள் வீட்டு வன்முறைகளுக்குள்ளாவது தெரிகிறது.

எனவே இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண்பதற்கு ஆண்களும் பெண்களும் நல்ல கல்வி அறிவைப் பெற்று சிறந்த பதவிகளை வகிக்க வேண்டும்.

நான் தற்போதிருக்கும் பொலிஸ் பொறுப்பதிகாரி என்ற கதிரையைக் கூட இங்கிருக்கும் உங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து கைப்பற்ற வேண்டும் என்று நான் அறைகூவல் விடுக்கின்றேன்.

இன்று சின்னஞ் சூட்டப்பட்ட மாணவத் தலைவர்களை பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து பதவிகளைப் பெற்று சேவையாற்றுமாறு நான் மகிழ்ச்சிக் கரம் நீட்டி அழைக்கின்றேன்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் ஆண்களும் பெண்களும் என தமிழ் பொலிஸார் கடமையாற்ற வந்திருக்கிறார்கள். ஆனால் துரதிருஷ்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இந்த அணியில் எந்தவொரு தமிழ் சமூகப் பொலிஸாரும் இணைந்து கொள்ளவில்லை.

பொலிஸ் சேவை என்பது இன்னொரு வகையில் சமூக சேவையாகவே கருத முடியும்” என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் உடற் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் வி. லவக்குமார் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ரீ. ராஜ்மோகன் பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் விக்னேஸ்வரி மகேஸ்வரன் உள்ளிட்டோரும் அயற்புற பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Posts