தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இராவணா சக்தி தன்னிடம் கோரியதற்கிணங்கவே அந்த விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் பிரச்சினையானது என்று இராவணா சக்தி என்னிடம் முறையிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேர்தல்கள் ஆணையாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியல்ல என்பதனை முதலில் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியே ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாகும். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட அரசியல் கூட்டமைப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்தக் கட்சி பதியப்படும் போதே அக்கட்சியின் கொள்கை அறிக்கையை தேர்தல்கள் ஆணையாளர் கோருவார்.
தேர்தல் காலத்தில் அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படாது.
அதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதி எனக்கு கிடைக்கவில்லை. அதனை அவர்கள் எனக்கு வழங்கவேண்டிய தேவையுமில்லை.
எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளேன் என்றார்.